தொடர் திருட்டு சம்பவம் எதிரொலி:திருச்செந்தூரில், 22 கண்காணிப்பு கேமராக்களை பொருத்திய மக்கள்
தொடர் திருட்டு சம்பவம் எதிரொலியாக திருச்செந்தூரில், 22 கண்காணிப்பு கேமராக்களை பொதுமக்கள் பொருத்தி உள்ளனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அன்புநகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் எதிரொலியாக அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த செலவில் 22 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதற்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தொடர் திருட்டு சம்பவம்
திருச்செந்தூர் பகுதியிலுள்ள வீடுகளில் சமீப காலமாக அடிக்கடி நகைகள், பணம் திருட்டு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருட்டு சம்பவங்களை கண்காணித்து தடுக்கும் வகையில் நகராட்சி 2-வது வார்டு
அன்புநகர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் ரூ.3½லட்சம் செலவில் அப்பகுதி முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர். இதன் மூலம் அப்பகுதியில் கொள்ளை போன்ற சம்பவங்கள் தடுக்கப்படுவது மட்டும் அல்லாமல், போலீசார் எளிதாக கொள்ளையர்களை பிடிப்பதற்கும் வசதியாக இருக்கும்.
திறப்புவிழா
இந்த கேமராக்கள் திறப்பு விழாவுக்கு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் வன்னியபெருமாள் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், நகராட்சி ஆணையர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல சங்க பொருளாளர் முத்துக்குமார் வரவேற்று பேசினார். விழாவில், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், சங்க ஆலோசகர் டாக்டர் ராஜேஷ்குமார், நகராட்சி 2-வது வார்டு கவுன்சிலர் செந்தில் குமார், திருச்செந்தூர் சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நலச்சங்க நிர்வாக குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அன்பு நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதற்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று திருச்செந்தூர் பகுதியில் உள்ள மற்ற பகுதி மக்களும் ஒன்று சேர்ந்து அவர்கள் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
நகராட்சி கூட்டம்
மேலும், திருச்செந்தூர் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கினார். ஆணையர் வேலவன், துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ரங்கீலா வரவேற்று பேசினார். கூட்டத்தில், திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, 11 இடங்களில் சிறிய அளவிலான சூரிய ஒளி விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
வரிவிதிப்பு முறையில் மறுவரையறை
மேலும், திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தில் ரூ.14 கோடி செலவில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு நிர்வாக அனுமதி வேண்டுவது மற்றும் திருச்செந்தூர் நகராட்சிப்பகுதிகளில் வரிவிதிப்பு முறையில் வேறுபாடு உள்ளதால், அரசு மதிப்பீட்டின் படி இடங்களை மறு வரையறை செய்திட அனுமதி கோருவது என்ற சிறப்பு தீர்மானம் உள்பட மொத்தம் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட திருச்செந்தூர் 8-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணவேணி செண்பகராமன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து கறுப்பு உடை அணிந்திருந்தார்.