கேரளாவில் சாலையோர ஓட்டலில் மசால்தோசை சாப்பிட்டார்: முதல்-அமைச்சர் எளிமைக்கு குவியும் பாராட்டு

கேரளாவிற்கு சென்ற போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையோர ஓட்டலில் மசால்தோசை சாப்பிட்டார். அவரது எளிமையை கண்டு கேரள மக்கள் பாராட்டினார்கள்.

Update: 2023-04-04 23:28 GMT

சென்னை,

கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக, கேரள மந்திரி பினராயி விஜயனுடன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

விழா முடிந்ததும், கொச்சி விமான நிலையத்துக்கு மு.க.ஸ்டாலின், சாலை வழியாக பயணம் செய்தார். அப்போது திருப்புனித் துறை என்ற இடத்தில் வரும் போது, அங்கிருந்த 'அன்னபூர்ணா' என்ற சைவ ஓட்டலில் சாப்பிடுவதற்காக சென்றார்.

அவருடன், தி.மு.க. நாடாளு மன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., கேரள தி.மு.க. நிர்வாகிகள் டாக்டர் ஜார்ஜ், ரபீக் ஆகியோர் இருந்தனர்.

தோசை சாப்பிட்டார்

ஓட்டலில் காரை நிறுத்தி, இறங்கி ஓட்டலுக்குள் ஏ.சி. அறைக்குள் சென்றார். இது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நடந்த நிகழ்வு என்று சொல்லப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்ததும், ஓட்டலில் இருந்தவர்களும், ஓட்டலில் பணியாற்றியவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அங்குள்ள ஏ.சி. அறைக்கு சென்ற அவர், ஸ்பெஷல் மசாலா தோசை சாப்பிட்டார். அவருடன் டி.ஆர்.பாலு எம்.பி.யும் சாப்பிட்டார். அதன் பின்னர் டீயும் குடித்தார். அங்கிருந்து வெளியே வந்த அவருடன் கேரள மக்கள் சிலர் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுடன் சகஜமாக பேசினார்.

பாராட்டு

சுமார் 20 நிமிடம் அந்த ஓட்டலில் இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு, கொச்சி விமான நிலையத்துக்கு சென்று, விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

இதுதொடர்பான வீடியோ காட்சி கேரள செய்தி சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

அதிலும் குறிப்பாக மக்களுக்கு மத்தியில் மு.க.ஸ்டாலின் எளிமையாக வந்து சென்றதை கேரள மக்கள் பாராட்டுகிறார்கள்.

இன்ப அதிர்ச்சி

இதுகுறித்து அந்த ஓட்டலை சேர்ந்த முத்து என்பவர் கூறும்போது, 'சாதாரணமாக, மிக எளிமையாக ஒரு முதல்-அமைச்சர் ஓட்டலுக்கு வந்தது, இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலேதான் வந்திருந்தார். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் எங்கள் ஓட்டலுக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கனவிலும் நினைத்து பார்த்தது இல்லை' என்றார்.

முத்து நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்