நாகர்கோவில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25 மாணவிகளுக்கு திடீர் வாந்தி;ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி
நாகர்கோவில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகளுக்கு வாந்தி
நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1,343 மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 146 மாணவிகளும், மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் 127 பேரும் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று மதியம் மாணவிகளுக்கு சாதம், சாம்பார், அவித்த முட்டை ஆகியவை மதிய உணவாக வழங்கப்பட்டது. மாணவிகள் சாப்பிட்ட பிறகு வழக்கம் போல் வகுப்பறைக்கு சென்றனர். இந்தநிலையில் பிற்பகல் 3 மணி அளவில் சத்துணவு சாப்பிட்ட 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவிகளில் சிலருக்கு வாந்தி ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மற்ற மாணவிகளும் தங்களுக்கு வாந்தி வருவது போன்ற உணர்வும், வயிற்றுவலியும், தலைசுற்றலும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
25 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
அதே சமயத்தில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் வண்டு கிடந்ததாகவும், அதனால் தான் வாந்தி ஏற்பட்டதாகவும் பாதிப்புக்குள்ளான மாணவிகளில் சிலர் ஆசிரியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. உடனே பள்ளி தலைமை ஆசிரியர் நல்ல பாக்கியலெட் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி, கல்வி மாவட்ட அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு நடந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் கல்வித்துறை அதிகாரிகளும், மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், சுகாதாரத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாந்தி எடுத்த மாணவிகள் 25 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் லேசான குமட்டல் அறிகுறிகள் தென்பட்ட 15 மாணவிகளுக்கு பள்ளி வகுப்பறையிலேயே மாநகராட்சி நகர்நல மைய டாக்டர்கள் மற்றும் மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெற்றோர் கதறல்
இதற்கிடையே மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டது பற்றிய தகவல் காட்டுதீயாக பரவியது. மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் பதற்றத்துடன் பள்ளியை நோக்கி படையெடுத்து வந்தனர். இதனால் கவிமணி அரசு பள்ளி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் ஒரு மாணவியின் தாயார் தனது மகள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலை கேட்டதும் கதறி அழுதார். அவருக்கு அங்குள்ள ஆசிரியர்கள் ஆறுதல் கூறியதோடு, உங்களுடைய மகள் நலமாக இருக்கிறார் என்றனர். பின்னர் ஆஸ்பத்திரியில் மாணவிகளுடன் இருந்த ஆசிரியரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மாணவியை தாயாருடன் பேச வைத்தனர். இருப்பினும் அவர் கதறி அழுதபடி ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். சத்துணவு சாப்பிட்ட 25 மாணவிகள் வாந்தி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் ஆறுதல்
மேலும் அமைச்சர் மனோதங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் உயர்தரமான சிகிச்சை அளிக்க அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், "வயிற்றுவலி என கூறி 25 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உணவு ஒவ்வாமை காரணமா? அல்லது வேறு காரணமா? என அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் நலமாக உள்ளனர். மதிய உணவை மாதிரி எடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய உள்ளனர் "என்றார்.
எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.
நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தியும் பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விவரத்தை கேட்டறிந்தார். பின்னர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, டாக்டர்களிடம் மாணவிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
விஜய்வசந்த் எம்.பி. டெல்லியில் இருந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீனை தொடர்பு கொண்டு மாணவிகளின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார். நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தனர்.