குப்பை கிடங்காக மாறி வரும் கிழக்கு கடற்கரை சாலை

அதிராம்பட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் குப்்பைகள் குவிந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

Update: 2023-03-13 18:44 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் குப்்பைகள் குவிந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

குவிந்து கிடக்கும் குப்்பைகள்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகர் பகுதியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை பிரிவு சாலைக்கு அருகில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

இதில் மீன் கழிவுகள், கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் என அனைத்து கழிவுகளும் சாலையோரங்களில் கொட்டப்பட்டு சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

இந்த கழிவுகளைத் தின்பதற்காக ஆடு, மாடு, நாய்கள் மற்றும் பறவைகள் அந்த பகுதிக்கு அதிக அளவு வந்து செல்கின்றன. இங்கு குப்பைகளை கிளறும் நாய்கள் குப்பைகளை குடியிருப்பு பகுதிக்கு இழுத்து சென்று போடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது.

வாகன போக்குவரத்து

மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்து வரும் நிலையில் வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் மட்டுமின்றி பஸ்களில் வரும் பயணிகள் இந்த இடத்துக்கு வரும் போது துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை மூடிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கழிவுகள் எங்கிருந்து வருகிறது, யார் வந்து கொட்டுகிறார்கள் என்பதுகூட இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இரவு நேரங்களில் வந்து சிலர் குப்பைகளை கொட்டி செல்வதாக கூறப்படுகிறது.

விரைவில் அகற்ற கோரிக்கை

எனவே உடனடியாக இந்த கழிவுகளை அகற்றவும் சாலையோரங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் சுரேஷ் கூறியதாவது:-

கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த பகுதியை தாண்டி கல்லூரி, தனியார் வங்கி, துணிக்கடைகள், பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் இதை அகற்றாததால், அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

தீ வைக்கப்படும் அவலம்

இது குறித்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது கூறியதாவது:- அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு குப்பை அடிக்கடி தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளுக்கு அவ்வப்போது இரவு நேரத்தில் தீ வைக்கப்படுவதால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். இந்த குப்பைகளில் பலதரப்பட்ட கழிவுகள் கிடப்பதால் தீ வைக்கப்படும் நேரங்களில் நச்சு கலந்த காற்றும் வருகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

பகலில் இரைதேடி வரும் நாய்கள் குப்பைகளை கிளறுவதாலும் ரோட்டில் குப்பைகள் பரவி கிடக்கின்றன. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் தேங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்