சென்னிமலை பகுதியில் நிலஅதிர்வு போல் பயங்கர வெடிச்சத்தம்; வீடுகளை விட்டு பொதுமக்கள் வீதிக்கு வந்ததால் பரபரப்பு

சென்னிமலை பகுதியில் நிலஅதிர்வுபோல் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் வீட்டை விட்டு பொதுமக்கள் வீதிக்கு ஓடி வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-12 20:57 GMT

சென்னிமலை

சென்னிமலை பகுதியில் நிலஅதிர்வுபோல் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் வீட்டை விட்டு பொதுமக்கள் வீதிக்கு ஓடி வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிச்சத்தம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் திடீரென வெடி வெடிப்பது போல் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு ஓடிவந்து வந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

மேலும் வெள்ளோடு பகுதி பொதுமக்களும் சென்னிமலை பகுதியில் வெடி சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்.

நிலஅதிர்வா?

இதுகுறித்து முருங்கத்தொழுவு கிராமத்தை சேர்ந்த தங்கமணி (வயது 51) என்பவர் கூறுகையில், 'நானும் எனது மனைவியும் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்.

அப்போது நில அதிர்வு ஏற்பட்டது போல் திடீர் என பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனடியாக நாங்கள் இருவரும் வெளியே ஓடி வந்து பார்த்தோம். அங்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த பகுதியில் இருந்தவர்களும் வெடி சத்தத்தை கேட்டதாக தெரிவித்தனர்' என்றார். இதேபோல் சென்னிமலை பகுதியில் பலரும் வெடி சத்தத்தை கேட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இது நில அதிர்வாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி புவியியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு 8.30 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது போல் வெடி சத்தத்தை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்