நெல்லையில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் பறக்கும் மண்பானைகள்
பொங்கல் பண்டிகைக்காக நெல்லையில் இருந்து மலேசியாவுக்கு மண்பானைகள் விமானத்தில் அனுப்பப்படுகின்றன.
நெல்லை,
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுமார் 3,500 பேர் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாமிரபரணி ஆறு பாயும் பகுதிகளில் உள்ள குளங்களில் தரமான கரம்பை மண் கிடைப்பதால் இந்த பகுதியில் தயாராகும் மண்பாண்டங்கள் அழகாக ஜொலிக்கிறது.
அதாவது அகல்விளக்கு, தேநீர் கோப்பை, வாட்டர் பாட்டில், கார் முதல் வீடுகள் வரை வைக்கப்படும் அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி சட்டி, பொங்கல் வைப்பதற்காக மண்பானைகள், கலயம் என பலவகையான பொருட்கள் நேர்த்தியாக செய்யப்படுகின்றன. இவற்றிற்கு உள்ளூரில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் மவுசு அதிகரித்துள்ளது.
மலேசியாவில் நல்ல வரவேற்பு
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் செயல்பட்டுவரும் கூட்டுறவு மண்பாண்ட சங்கத்தில் இருந்து சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட 12 வளைகுடா நாடுகளுக்கு மண்ணில் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்கள், பிரியாணி சட்டி மற்றும் சாம்பிராணி கிண்ணம் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்படுகின்றன.
தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக இந்த நாடுகளில் மண்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. இதனால் இந்த நாடுகளில் பொங்கல் பண்டிகை காலத்தில் மண்பானைகளுக்கு அதிக கிராக்கி ஏற்படும். தமிழ்நாட்டில் இருந்து பொங்கல் வைப்பதற்கு மண்பானைகள் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் செய்யப்படுகின்ற மண்பானைகள் நல்ல கலைநயத்துடன் தரமாக இருக்கும் என்பதால் இந்த மண்பானைகளுக்கு மலேசியாவில் அதிக வரவேற்பு உள்ளது.
விமானம் மூலம்...
இதனால் மேலப்பாளையம் குறிச்சியில் இருந்து பொங்கல் பண்டிகையையொட்டி மலேசியாவுக்கு அனுப்புவதற்காக தரமான மண்பானைகள் தயாரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு வருகிறது. இந்த மண்பானைகள் நெல்லையில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு லாரிகள் மூலமும், அங்கிருந்து விமானம் மூலமும் மலேசியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த மண்பானை நெல்லையில் ரூ.150 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 3000-க்கும் மேற்பட்ட பானைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் பூசும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த மண்பானைகளுக்கு மலேசியாவில் அதிக வரவேற்பு உள்ளதால் வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப பிரத்யேகமாக மண்பானைகளை தயார் செய்து அனுப்பப்படுகிறது.
மண்பானைகளில் உணவு பரிமாற்றம்
இதுகுறித்து மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் இருந்து மண்பானைகள், பிரியாணி சட்டிகள் என ஏராளமான மண்பாண்ட பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவை அங்கு கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா காலத்தில் கப்பல், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோடிக்கணக்கான மண்பாண்ட பொருட்கள் தேங்கி கிடந்தன. தற்போது மீண்டும் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் உள்ள மிகப்பெரிய ஓட்டல்களில் கூட மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமையல் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. மண் பாத்திரங்களிலேயே உணவைப் பரிமாறுகிறார்கள். இதனால் மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, வளைகுடா நாடுகளில் இருந்து எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் வருகின்றன.
95 சதவீதம் ஏற்றுமதி
மழைக்காலத்தில் மண்பாண்டங்கள் காய வைப்பதில் சற்று தாமதமாகும். அதற்கு தகுந்தபடி நாங்கள் ஆர்டர் எடுக்கும்போதே இவ்வளவு நாள் கழித்து அனுப்புவோம் என்பதை வாடிக்கையாளர்களிடம் சொல்லிவிடுவோம். அவர்களும் எங்களது நிலைமையை புரிந்து கொள்கிறார்கள். எங்களிடம் தயாராகும் மண்பாண்டங்களில் 95 சதவீதம் ஏற்றுமதி செய்வதற்காகவே உற்பத்தி செய்கிறோம்.
முன்பெல்லாம் கையால் மண்பாண்டங்கள் செய்யும்போது குறைவாகவே செய்ய முடியும். ஒரே அளவாகவும் இருப்பதில்லை. ஆனால், தற்போது எந்திரங்களின் உதவியுடன் தயாரிப்பதால் ஒரே அளவாக இருக்கிறது. இதனால் குறித்த நேரத்தில் ஆர்டர்களை டெலிவரி செய்ய முடிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.