ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா: திங்கட்கிழமை தொடங்குகிறது

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா திங்கட்கிழமை தொடங்குகிறது

Update: 2023-08-04 18:45 GMT

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் வலம் வருதல் நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு 8 மணிக்கு திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் கோவில் வலம் வருதல், 9-ந் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரம், 10-ந் தேதி இரவு 8 மணிக்கு பூங்குயில் சப்பரத்தில் நடராஜ அலங்காரம், 11-ந் தேதி இரவு 8 மணிக்கு திருப்புன்னைச் சப்பரத்தில் நவநீதகிருஷ்ண அலங்காரத்தில் சுவாமி வலம் வருவார். வருகிற 12-ந் தேதி இரவு 7 மணிக்கு பொம்மலாட்டம், இரவு 8.30 மணிக்கு ஏக சிம்மாசன சப்பரத்தில் பால சேர்மன் அலங்காரம், 13-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பல்லாக்கில் தவழ்ந்த கிருஷ்ண திருக்கோலம், இரவு 9 மணிக்கு நாதஸ்வரம், சிறப்பு தவில், 14-ந் தேதி திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், இரவு 8 மணிக்கு வில்வச் சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம், 15-ந் தேதி இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி திருக்கோலத்தில் ஏரல் நகர் வீதிவலம் வருதல் நடைபெறுகிறது. ஆடி அமாவாசை திருவிழா வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி தருதலும், அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள், மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலம், இரவு 11 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருதல் நடைபெறுகிறது. வருகிற 17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருளை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல்12.30 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்