அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திட்டக்குடியில நடந்த மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர்.

Update: 2023-07-20 18:45 GMT

திட்டக்குடி,

திட்டக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதந்தோறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் திட்டக்குடி கோட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடைந்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, உரிய முறையில் நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பு மாதத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திட்டக்குடி கோட்ட மேற்பார்வை பொறியாளர் சதாசிவம் தலைமையில், செயற்பொறியாளர் வள்ளி முன்னிலையில் நேற்று திட்டக்குடி மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்வாாிய அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டம் தொடர்பாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாததால், மின் நுகர்வோர் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து மின்நுகர்வோர் கூறுகையில், குறைதீா்க்கும் கூட்டம் தொடர்பாக எங்களுக்கு முறையான அறிவிப்பு ஏதும் இல்லை. இதனால் நாங்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இனிவரும் காலங்களில் கூட்டம் தொடர்பாக எங்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கவேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்