மாவட்டத்தில் இந்த ஆண்டில் குண்டர் சட்டத்தில் 100 பேர் சிறையில் அடைப்பு: போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டில் 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Update: 2022-11-06 18:45 GMT

குண்டர் தடுப்பு சட்டம்

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா வியாபாரிகள் 34 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

100 பேர்

அதுபோல், திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர், கொலை, கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபட்ட 43 பேர், போக்சோ வழக்கில் கைதான 10 பேர், மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்