வாரவிடுமுறையையொட்டிவைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வாரவிடுமுறையையொட்டி ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-05-14 18:45 GMT

வைகை அணை பூங்கா

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வருகை தரும் சுற்றுலா பயணிகள் வைகை அணை மற்றும் பூங்காவை கண்டு களித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கோடை விடுமுறை, வார விடுமுறையையொட்டி நேற்று வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை களித்தனர். மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரெயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர். வைகை அணையில் புதிதாக தொடங்கி உள்ள பெடல் படகுகளில் மகிழ்ச்சியுடன் சவாரி செய்தனர்.

சுற்றுலா பயணிகள்

பூங்காவில் உள்ள புல்வெளியில் குடும்பம், குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். வைகை அணை வலதுகரை பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இசை நடனநீருற்று பழுதடைந்த நிலையில் உள்ளது.

இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் இசை நடன நீருற்றை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் வைகை அணை பூங்காவை தொடர்ந்து பராமரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்