திருச்சி மாநகராட்சி பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய திட்டம்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் குறித்த விவாதத்தின்போது, மாநகரில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக மேயர் அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2022-06-02 20:44 GMT

திருச்சி:

பட்ஜெட் விவாதம்

திருச்சி மாநகராட்சியின் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 31-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருச்சி மாநகராட்சியின் அவசர கூட்டம் மற்றும் பட்ஜெட் மீதான விவாதம் மாநகர மன்ற கூட்டரங்கில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார்.

மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள், உதவி ஆணையாளர்கள், உதவி பொறியாளர்கள், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர்கள் பாராட்டு

கூட்டத்தில் பேசிய தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் மற்றும் அ.ம.மு.க., சுயேட்சை கவுன்சிலர்கள் பட்ஜெட்டை பாராட்டி பேசினார்கள். அப்போது, பாரபட்சமின்றி அனைத்து கவுன்சிலர்களுக்கும் நிதி ஒதுக்கி இருப்பதாகவும், அனைத்து வார்டுகளிலும் சேவை மையம் கட்ட கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், உபரியாக உள்ள கல்வி நிதியை பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்கள்.

மேலும் தி.மு.க. கவுன்சிலர்கள் பேசுகையில், திருச்சிக்கு வந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்து சென்ற முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர். அத்துடன் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டி, அதை நிறைவேற்ற கோரிக்கை விடுத்தனர். மேலும் மாமன்ற கூட்டரங்கில் உள்ள மைக் அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மேயர் பதில் அளித்து பேசியதாவது:-

'பெஸ்ட்' பட்ஜெட்

இந்த பட்ஜெட்டை அனைவரும் பாராட்டி உள்ளீர்கள். இதற்கு நமது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்தான் காரணம். அனைத்து வார்டுகளுக்கும் சமமான நிதியை வழங்க வேண்டும் என்று அவர்தான் கூறினார். அ.தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்கள், மற்றவர்கள்போல் பட்ஜெட்டை பாராட்டிவிட்டு, ஏதோ ஒரு காரணம் சொல்லி வெளிநடப்பு செய்துள்ளனர். நமது மாநகராட்சி பட்ஜெட் குறித்து அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தான் 'பெஸ்ட்' என்று கூறுகின்றனர். பத்திரிகைகளும் பாராட்டி எழுதி உள்ளன.

திருச்சி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலைகள் குறித்து என்னிடம் கேட்டறிந்தார். அப்போது பாதாள சாக்கடை பணி முடிந்த உடன் ரூ.46 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ள சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தேன்.

முதல்-அமைச்சர் பாராட்டு

உளவுத்துறை வைத்து நமது மாநகராட்சியை முதல்-அமைச்சர் கண்காணிக்கிறார். அவர்களும் மக்களுக்காக சரியாக உழைக்கிறார்கள் என்று அறிக்கை கொடுத்துள்ளனர். நமது மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தை முதல்-அமைச்சர் படிப்பதற்காக வாங்கிச் சென்றுள்ளார்.

இதுமிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் திருச்சி மாநகரில், 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது. கவுன்சிலர்கள் நிதி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கான்கிரீட் தளம்

கொட்டப்பட்டு குளம் உள்பட அனைத்து குளங்கள், வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும். திருச்சியில் உள்ள வாய்க்கால்கள் திறந்தநிலையில் உள்ளது. சென்னையில் உள்ளது போல், மேல் பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து, குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படும்.

பஞ்சப்பூரில் இருந்து குடமுருட்டி வரை சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கொட்டப்பட்டு குளத்தில் இருந்து மாவடி குளம் செல்லும் வாய்க்கால் சரிசெய்யப்படும். பட்ஜெட்டில் உள்ள அனைத்து திட்டங்களும் இந்த வருடமே நிறைவேற்றப்படும். கவுன்சிலர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த 65-வது வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி பேசுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து வார்டுகளிலும் பணி நடக்க வேண்டும். டெண்டர்கள் வெளிப்படையாக இல்லாததால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இனிவரும் காலங்களில் வெளிப்படையாக டெண்டர்கள் விட வேண்டும். தெற்கு தேய்கிறது, வடக்கு வளர்கிறது என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன் அவரை நீண்ட நேரம் பேச அனுமதிக்கக்கூடாது என்று கூறினர். இதனால் மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர், மேற்கு தொகுதியில் உள்ள வார்டுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குகிறீர்கள் என்று குற்றம்சாட்டினார். உடனே மேயர், யாரோ எழுதி கொடுத்ததை கொண்டு வந்து இங்கு வாசிக்காதீர்கள், என்று கண்டித்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்