மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகாதவாறு கண்காணிக்க வேண்டும்
மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகாதவாறு கண்காணிக்க வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா வலியுறுத்தினார்.
மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகாதவாறு கண்காணிக்க வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா வலியுறுத்தினார்.
கிராமசபை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியம் குளித்திகை ஜமீன் பகுதியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொது நிதி செலவீனம் மற்றும் திட்டப்பணிகள் தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், நம்ம ஊரு சூப்பரு திட்டம், ஜல்ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கண்காணிக்க வேண்டும்
நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் குக் கிராமங்களிலும் திட கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். ஸ்வட்ச் பாரத் திட்டத்தின் கீழ் கழிவறைகள், தனிநபர் கழிப்பிடம், சமுதாய கழிப்பறைகள் போன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவின் படி நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிக்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகாதவாறு கண் காணிக்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள், கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் வருவாய் துறை ஊரக, வளர்ச்சி துறை வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் சார்பில் 15 லட்சம் செடிகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்தக் குளித்தியை ஜமீன் ஊராட்சியில் 1,000 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாதனூர் ஒன்றியக் குழு துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், சந்திரன், குளித்திகை ஜமீன் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி, வேளாண்மை துறை இயக்குனர் பச்சையப்பன், வேளாண் வணிகத்துறை இயக்குனர் செல்வராஜு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பாக அலுவலர் திருமாவளவன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.