துரியன் பழங்கள் விற்பனை அமோகம்

பர்லியார் பழ பண்ணையில் துரியன் பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

Update: 2022-08-27 14:58 GMT

குன்னூர்,

பர்லியார் பழ பண்ணையில் துரியன் பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

துரியன் பழங்கள்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு அரிய வகை மூலிகை தாவரங்கள், பழங்கள் காணப்படுகின்றன. இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் கடல் மட்டத்தில் இருந்து 830 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில் மருத்துவ குணங்கள் நிறைந்த துரியன் பழ மரங்கள் உள்ளன.

இந்த பழத்தை குழந்தை இல்லாத தம்பதியினர் உட்கொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு பழ பண்ணையில் 20 துரியன் மரங்கள் உள்ளன. இதன் சீசன் காலம் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை உள்ளது. தற்போது துரியன் துரியன் பழ சீசன் என்பதால் மரங்களில் பழங்கள் காய்த்து குலுங்குகிறது.

கிலோ ரூ.500-க்கு விற்பனை

இந்த ஆண்டு பழங்கள் அதிகளவில் காய்த்து உள்ளது. இந்த பழம் மருத்துவ குணங்கள் வாய்ந்தது என்பதால், ஆண்டுதோறும் அதன் விற்பனை அதிகரித்து வருகிறது. பழ பண்ணையில் மரங்களில் இருந்து தானாகவே கீழே விழும் பழங்களை சேகரித்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் பழங்களை விற்பனை செய்ய ஏலம் விடப்படுகிறது. கடந்த மாதம் பழங்கள் ஏலம் விடப்பட்டது.

தற்போது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால், பர்லியார் பகுதியில் துரியன் பழம் கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏராளமானோர் பர்லியார் பகுதியை தேடி வந்து, இந்த பழங்களை வாங்கி செல்கின்றனர். இதனால் பர்லியாரில் துரியன் பழ விற்பனை களை கட்டி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்