பூங்காவுக்காக ஒதுக்கிய நிலத்தில் குப்பைகளை கொட்டுவது ஏற்புடையதல்ல-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பூங்காவுக்காக ஒதுக்கிய நிலத்தில் குப்பைகளை கொட்டுவது ஏற்புடையதல்ல என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2023-05-29 21:01 GMT


கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்சி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கரூர் மாவட்டம் ஆண்டாள் கோவில் கிழக்கு கிராம பஞ்சாயத்தில் உள்ள கே.ஆர். நகர் குடியிருப்பு பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்காக திறந்த வெளி பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த இடத்தில் கிராம பஞ்சாயத்துகளின் குப்பை கழிவுகளைக் கொட்டி அதனை பதப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது சட்டவிரோதமானது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மக்களும் பல தொற்றுநோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே, திறந்த வெளிபூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் குப்பைக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் குப்பை கழிவுகளை கொட்டி அதனை பதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அந்தப் பகுதியில் குப்பை கழிவுகளை பதப்படுத்தும் நோக்கத்திற்காக தகர செட்டுகள் அமைத்ததாக மனுதாரர் தெரிவிக்கிறார். இது ஏற்புடையதல்ல. எனவே மனுதாரர் புகார் குறித்து அரசு தரப்பில் உரிய விளக்கத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும். மேலும் அங்கு குப்பை பதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அந்த இடத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்