சாலை வசதி இல்லாததால் நோயால் பாதித்த தந்தையை 3 கி.மீ. தூரம் தோளில் சுமந்த மகன்

சாலை வசதி இல்லாததால் நோயால் பாதித்த தந்தையை காப்பாற்ற 3 கி.மீ. தூரம் மகன் தோளில் சுமந்து ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் உரிய நேரத்துக்கு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்தார்.

Update: 2022-11-13 20:52 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பேச்சிப்பாறை அணைக்கு அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புக்கு செல்ல சாலை வசதி கிடையாது. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாது. பாதிக்கப்பட்ட நபரை சில கி.மீ. தூரம் தூக்கி சென்று அங்கிருந்து வாகனத்தில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்ற பரிதாப நிலை இருக்கிறது.

தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்

இந்தநிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பேச்சிப்பாறை கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பைச் சேர்ந்த வேலு (வயது 67) என்பவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.

இதையடுத்து அவருடைய மகன் விக்னேஷ், தந்தையை காப்பாற்ற தோளில் சுமந்து சென்றார். அந்த வகையில் 3 கி.மீ. தூரம் கடந்து சென்ற அவர் பின்னர் ஒரு காரில் ஏற்றி பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

காப்பாற்ற முடியாத துயரம்

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வேலு ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

இதனை கேட்டு மகன் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். சாலை வசதியில்லாததால் நோயால் பாதித்த வேலுவை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாததால் அவர் உயிரிழந்த சம்பவம் பழங்குடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்