கடற்கரையில் மணல் குன்றுகள் அழிந்து வருவதால் கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம்

வடக்கு, தெற்கு பொய்கை நல்லூர் கடற்கரையில் ராட்ச அலைகளை தடுக்கும் அரணாக விளங்கி வரும் மணல் குன்றுகள் அழிந்து வருவதால் கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-29 18:45 GMT

வடக்கு, தெற்கு பொய்கை நல்லூர் கடற்கரையில் ராட்ச அலைகளை தடுக்கும் அரணாக விளங்கி வரும் மணல் குன்றுகள் அழிந்து வருவதால் கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் குன்றுகள்

நாகை இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மாவட்டமாக உள்ளது. இங்கு சுனாமி, கஜா புயல் உள்ளிட்டவை ஏற்படுத்திய பேரழிவுகள் இன்றளவும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. இந்த சூழலில் கடற்கரை கிராமங்களை ராட்சத அலைகளில் இருந்து பாதுகாக்கும் அரணாக மணல் குன்றுகள் இருந்து வருகிறது.

நாகை அருகே வடக்கு, தெற்கு பொய்கை நல்லூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் இயற்கையாகவே அமைந்த மணல் குன்றுகள் உள்ளன. இவை 6 அடி முதல் 60 அடி உயரம் வரை பிரம்மாண்ட மலை போல் காட்சியளிக்கிறது. இதில் முந்திரி, சவுக்கு, பனை உள்ளிட்ட மரங்கள் அடர்ந்து வளர்ந்து குறுங்காடுகள் போல காட்சி அளிக்கிறது.

பேரழிவை ஏற்படுத்தும்

இங்கு வளர்ந்துள்ள தாழை மரங்கள் மணல் குன்றுகளை வலு சேர்க்கிறது. இந்த மணல் குன்றுகள் வடக்கு, தெற்கு பொய்கைநல்லூரை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாத்து வந்தது. காலப்போக்கில் இந்த மணல் குன்றுகள் கடல் அரிப்பு காரணமாக மெல்ல மெல்ல சரிந்து வருகின்றன. இதில் உள்ள சவுக்கு, பனை மரங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டு வருகிறது.

ஒரு கட்டத்தில் இந்த மணல் குன்றுகள் அழிந்து போனால் வடக்கு, தெற்கு பொய்கை நல்லூர் கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து பேரழிவை ஏற்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பேரழிவை தடுக்க கடற்கரை பகுதியில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

இதுகுறித்து வடக்கு பொய்கை நல்லூரை சேர்ந்த மணிவண்ணன் கூறுகையில், கடல் சீற்றத்தின் போது கடலோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இயற்கையாக அமைந்த மணல் குன்றுகளால் வடக்கு, தெற்கு பொய்கைநல்லூர் கடற்கரை கிராமங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.சுனாமிக்கு பிறகு கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லாறு மீனவ கிராமத்தில் கடல் நீர் உட்பகாதபடி கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு அந்த கிராமங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கல்லாரில் இருந்து வடக்கு, தெற்கு பொய்கை நல்லூர், வேளாங்கண்ணி வரை உள்ள கடற்கரை பகுதி கடல் அரிப்பினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடக்கு, தெற்கு பொய்கை நல்லூரில் இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் மணல் குன்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.சுனாமியில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாத்த மணல் குன்றுகள் அழிந்து வருவது வேதனையாக உள்ளது. ஒரு கட்டத்தில் இந்த மணல் குன்றுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டால் வடக்கு, தெற்கு பொய்கை நல்லூர் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்து விடும் அபாய நிலை ஏற்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லாரில் இருந்து, வேளாங்கண்ணி வரை கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து பேரழிவிலிருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

படிப்படியாக அழிந்து வருகிறது

தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்த சந்திரபோஸ் கூறுகையில், நான் எம்.பி.ஏ. படித்துமுடித்துவிட்டு தெற்குபொய்கை நல்லூரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். கத்தரி, வெண்டை, கொத்தவரங்காய், எள்ளு, கடலை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகிறேன். இதுதவிர மலை பிரதேசத்தில் விளையக்கூடிய வாட்டர் ஆப்பிளை கடலோர பகுதியில் சாகுபடி செய்து வெற்றி கண்டுள்ளேன். சாகுபடி நிலத்தில் இருந்து சிறிது தூரத்தில் கடல் உள்ளது. கடல் சீற்றத்தால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பாதுகாக்க கடலோரத்தில் உள்ள மணல் குன்றுகள் பேருதவியாக இருக்கிறது. இந்த மணல் குன்றுகள் தற்போது படிப்படியாக அழிந்து வருவது என்னை போன்ற இயற்கை விவசாய ஆர்வலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணல் குன்றுகள் அழிந்தால் விவசாய நிலத்துக்குள் கடல் நீர் எளிதாக வந்துவிடும். உப்பு நீர் புகுந்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும். எதிர்காலத்தில் நான் விவசாயம் செய்ய முடியுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கனவுகளுடன் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்த எனக்கு மணல் குன்றுகள் அழிந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே எங்கள் பகுதி விவசாய நிலத்துக்குள் கடல் நீர் உட்புகுந்து விடாமல் தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும் என்றார்.

குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகும் அபாயம்

வடக்கு பொய்கை நல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலர் அரிகிருஷ்ணன் கூறுகையில்,சுனாமிக்கு பிறகு கடல் பல மீட்டர் வரை கரை பகுதிக்கு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடல் அரிப்பு காரணமாக வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள மணல் குன்றுகள் அடித்து செல்லப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சவுக்கு, தென்னை மரங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டு விட்டது. கடற்கரை நெடுகிலும் மரங்கள் சரிந்து விழுந்து கிடப்பதை பார்ப்பதற்கு வேதனையாக உள்ளது. இதனால் மணல் குன்றுகளில் பனை விதைகள் நடப்பட்டது. இந்த இளம் கன்றுகளும் கடல் அரிப்பால் அடித்து செல்லப்பட்டு மணல் குன்றுகள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றது. இந்த கடற்கரை பகுதியில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று பலமுறை சம்பந்தப்பட்ட துறையினரிடம் மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கையாக அமைந்த மணல் குன்றுகள் கடல் அரிப்பால் முழுவதும் அடித்து செல்லப்பட்டு வடக்கு, தெற்குபொய்கை நல்லூர் விவசாய நிலங்களை அழித்து, குடியிருப்புக்குள் கடல் நீர் உட்புகுவதற்குள் அங்கு கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்