காலமாற்றத்தால் காணாமல் போகிறார்களா குடுகுடுப்பைக்காரர்கள்? மனம் திறக்கும் கோடங்கிகள்

காலமாற்றத்தால் காணாமல் போகிறார்களா குடுகுடுப்பைக்காரர்கள்? மனம் திறக்கும் கோடங்கிகள்

Update: 2022-11-03 20:19 GMT

 'நல்ல காலம் பிறக்குது, ஜக்கம்மா சொல்றா.. இந்த வீட்டுக்காரங்களுக்கு கிழக்க இருந்து நல்ல சேதி வரப்போகுது' என குடுகுடுப்பையை ஒலித்துக்கொண்டு குறி சொன்ன குடுகுடுப்பைக்காரர்கள் இன்று கிராமப்புறங்களில் காணாமல் போய் விட்டார்களோ? என்று நகரவாசிகள் கேட்க தொடங்கி உள்ளனர்.

ஆம். கம்ப்யூட்டர் யுகமாக மாறிய காலமாற்றத்தால் காணாமல் போகிறார்களோ குடுகுடுப்பைக்காரர்கள் என்ற கேள்வி நம்மில் எழத்தொடங்கியது. இந்த கேள்வியுடன், சேலம் மாவட்டத்தில் குடுகுடுப்பைக்காரர்கள் அதிகளவில் குறிசொல்லும் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவர்களை தேடத்தொடங்கினோம்.

பீதியில் உறைந்த காலம்

நள்ளிரவு நேரம். கிராமத்தில் பறவைகளின் சத்தம் கூட ஓய்ந்து அடங்கியிருக்கும். தொலைவில் மெல்லியதாக ஒரு ஓசை, கூடவே நாய்களின் இடைவிடாத குரைக்கும் சத்தம். சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பை கணீரென்று ஒலிக்கும்போது கிராமவாசிகளின் மனம் திடுக்கிடும்.

ஏதாவது கெட்ட சேதியை குடுகுடுப்பைக்காரர் சொல்லிவிட்டால் என்ன செய்வது? 'இந்த தெருவில பெரிய உசிரு ஒன்னு அய்யோனு போகப் போகுது' என்று சாமக்கோடங்கி சொன்னால், என்ன செய்ய முடியும்? என்ற பீதியில் உறைந்த காலம் இன்று இருக்கிறதா? என்று அவர்களை பற்றிய தேடலின் வெளிப்பாடு தான் இந்த பதிவாகும்.

குலத்தொழில்

குடுகுடுப்பைக்காரர்களின் பாரம்பரியமான குலத்தொழில் குடுகுடுப்பை எனப்படும் சிறிய உடுக்கையை ஒலித்துக்கொண்டு குறி சொல்லுதல் ஆகும். அதன்மூலம் மக்களிடமிருந்து பெறும் உணவு, தானியம், பழைய துணிகள், பணம் போன்றவற்றைக்கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் குடும்பத்துடன் ஊர்ஊராக நாடோடி போல சென்று பொருளை தேடி அலைகின்றனர். எனினும் அவ்வப்போது, தங்கள் பூர்வீக ஊருக்கு வந்து தங்கிச்செல்கின்றனர். வைகாசி மாதம் முழுக்க அவர்கள் ஊரில் தங்கியிருப்பது கட்டாயமாகும்.

அந்த வகையில் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கிராம மக்களை குறி வைத்து குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரன் என்னும் கோடங்கிகள் தங்களது குல தொழிலை மறக்காமல் சமுதாய கட்டாய பழக்க வழக்கமாக நள்ளிரவில் குடுகுடுப்பை அடித்து ஜக்கம்மா அருள்வாக்கு குறி சொல்லி வருவது இன்றளவும் தொடர தான் செய்கிறது.

ஜக்கம்மா அருள்வாக்கு

சேலம் மாவட்டம் தேவூர் அருகே பாலிருச்சம்பாளையம், பெரமாச்சிபாளையம், செட்டிபட்டி, மேட்டுப்பாளையம், வட்ராம்பாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கோடங்கிகள் குடும்பத்துடன் கோவில்களில் தங்கி நள்ளிரவில் வீடுகளுக்கு சென்று குடுகுடுப்பை அடித்து ஜக்கம்மா அருள்வாக்கு குறி சொல்கின்றனர்.

கோடங்கிகளில் ஒரு சிலர் செல்வந்தர்களாக நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட சமுதாய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு குறி சொல்வதை கட்டாய நடைமுறையாக்கி கொண்டு உள்ளனர்.

சிலிர்ப்புடன் கவனிப்பார்கள்

மேலும் கோடங்கிகள் குறி சொல்லும் பணியை தெய்வ பணியாக ஏற்று செய்வதாக கூறுகிறார்கள். குடுகுடுப்பைக்காரர் நள்ளிரவில் அவரின் ஆழ்மனதில் நினைப்பதை அப்படியே வீட்டின் வாசலில் நின்று இந்த குடும்பத்திற்கு என்ன என்ன நன்மைகள் நடக்கப் போகிறது என்பதையும், என்ன என்ன தீமைகள் வரப்போகிறது என்பதையும் இறைவனை நினைத்து தியானித்து குறி சொல்வார்.

அப்போது இரவில் கோடங்கி அடிக்கும் குடுகுடுப்பை சத்தத்தை கேட்டு வீட்டில் இருப்போர் ஒருவித சத்தத்துடன் உடல் சிலிர்த்து எழுந்து வீட்டின் கதவை திறக்காமல் கதவருகே நின்று என்ன சொல்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிப்பார்கள்.

மேலும் மறுநாள் விடிந்ததும் காலையில் திரும்பவும் கோடங்கி குறி சொல்ல வீட்டுக்கே வந்து வருகிற நன்மைகள் தீமைகளை பட்டியலிட்டு சொல்வார். தீமைகளை சரிசெய்ய ஒரு சில கோவிலுக்கு சென்று சில பரிகாரங்கள் செய்து வணங்கினால் நிலைமை சரியாகிவிடும் என சொல்லுவார். அதற்காக அந்த குடும்பத்தினர் வழங்கும் சன்மானம், பணம், பொருள், துணிகள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு குடும்பத்தை வாழ்த்தி விட்டு சென்று விடுவார்.

சாதாரண உடையில்...

அதாவது நள்ளிரவில் தலைப்பாகையுடன் முகத்தில் கரும்புள்ளி மற்றும் கண் புருவத்தில் கருப்பு நிற மைகள் வைத்துக்கொண்டு இரவில் விகாரமாக காட்சி அளித்து குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் கோடங்கிகள், மறுநாள் காலையில் சாதாரண உடைகள் அணிந்து வீட்டிற்கு வந்து இரவில் சொன்னதை திரும்பவும் சொல்வார் அப்போது மக்கள் பயம் இன்றி அவர் அருகில் நின்று சொல்வதைக் கேட்பார்கள்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நவீனயுகம் என்பதால் சாதாரண மக்கள் கையிலும் ஆன்ட்ராய்டு போன் உபயோகம் உள்ளதால் போனில் ஜாதகம், கை ரேகை பார்த்தல் என வந்துவிட்டதால் கோடங்கிகளின் குறி சொல் கேட்பதில் மக்கள் ஆர்வம் குறைய தொடங்கி உள்ளது.

மோசடி கும்பலும் உண்டு

இது ஒருபுறம் இருக்க இவர்களை போலவே சம்பந்தமே இல்லாத மோசடி கும்பல் கிராமப்புறங்களில் பொது மக்களை மோசடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அலைகின்ற கும்பலும் உண்டு. குடுகுடுப்பைக்காரர்கள் இல்லாத நிலையில், அவர்களை போன்று வேடமிட்டு செல்லும் மோசடி பேர்வழிகள் படிப்பறிவு இல்லாத கிராம மக்களை குறி வைத்து நள்ளிரவில் சென்று இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி பயம் அடைய செய்கிறார்கள். மறுநாள் விடிந்து காலையில் வீடுகளுக்கு சென்று உங்கள் வீட்டில் பேய் காத்து, கருப்பு மற்றும் கெட்ட ஆவிகள் உலாவுகிறது.

இதை விரட்ட சுடுகாட்டில் நள்ளிரவில் பூஜை செய்ய பல ஆயிரம் ரூபாய் செலவாகும் எனக்கூறி பயந்த சுபாவம் உள்ள மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். மேலும் உங்கள் உயிருக்கு ஆபத்து என பயமுறுத்தி பரிகாரம் செய்ய வேண்டும் எனக்கூறி பணம் பறிக்கவும் செய்கின்றனர்.

கிராமப்புற பகுதிகளில் மோசடி செய்யும் நோக்கில் உலா வரும் கும்பலால் குல தொழிலாக பக்தியுடன் குறி சொல்லும் உண்மையான கோடங்கிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பரம்பரை பரம்பரையாக குல தொழிலை மறக்காமல் கிராமப்புறங்களில் குறி சொல்லி வாழ்க்கை நடத்தி வரும் நலிவுற்ற கோடங்கிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

கோடங்கிகள் என்ன சொல்கிறார்கள்?

அதே நேரத்தில் காலமாற்றத்தால் கோடங்கிகள் காணாமல் போகிறார்களா என்று கோடங்கிகளிடம் நாம் பேசிய போது அவர்கள் கூறியதாவது:-

நாமக்கல் பகுதியை சேர்ந்த கோடங்கி சொக்கநாதன்:-

குல தொழிலாக குறி சொல்லும் தொழிலை செய்து வருகிறோம். ஆண்டில் ஒரு சில நாட்களுக்கு கிராமப்புற பகுதிகளில் சென்று ஆழ் மனதில் நினைப்பதை அவர்களின் முகம் பார்த்து குறி சொல்லி வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறங்களில் எங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. நாங்கள் சொல்வதை நம்பிக்கையுடன் கேட்டு தீமைகளை போக்க பரிகாரம் மற்றும் வழிபாட்டு பூஜை செய்து தீர்வும் ெபற்றனர். தற்போது மொபைலில் அனைத்தும் தெரிந்து கொள்கின்றனர். இதனால் தற்போது நாங்கள் சொல்வதை ஒருசிலர் மட்டுமே கேட்கின்றனர். ஆண்டில் சில நாட்களுக்கு மட்டுமே குறி சொல்லி விட்டு மீதி நாட்களில் வேறு தொழில் செய்து குடும்பம் நடத்தி வருகிறோம்.

தேவூர் சுற்றுவட்டார பகுதியில் குறி சொல்லும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த கோடங்கி மணி கூறியதாவது:-

எங்களது சமுதாயத்தில் கோடங்கி பலர் உயர் போலீஸ் அதிகாரியாகவும், தாசில்தார் உள்பட பல்வேறு அரசு வேலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும் நாங்கள் ஆண்டில் 6 மாத காலத்திற்கு வீடுகளில் நள்ளிரவில் குடுகுடுப்பை அடித்து குறி சொல்வதை கட்டாய பழக்க வழக்கமாக கொண்டுள்ளோம். இதனால் நாங்கள் குடும்பத்துடன் தேவூர் அருகே கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் தங்கி சமையல் செய்து சாப்பிடுவோம். பின்னர் ஆண்கள் மட்டும் நள்ளிரவில் சுடுகாட்டிற்கு சென்று இறைவனை வழிபட்டு பூஜை செய்து பின்னர் வீடுகளுக்கு சென்று ஆழ்மனதில் நினைப்பதை ஜக்கம்மாவை வழிபட்டு குறியாக சொல்லுவோம். பின்னர் அடுத்த நாள் விடிந்ததும் காலையில் திரும்பவும் சென்று அவர்களை முகம் பார்த்து குறி சொல்லி வருகிறோம். அதற்கு அவர்கள் கொடுக்கும் சன்மானத்தை பெற்று கொண்டு வாழ்த்தி விட்டு செல்கிறோம். மேலும் நாங்கள் சொல்வது அப்படியே நடப்பதால் கிராமப்புற மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்