உதவி மையங்களில் சர்வர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட உதவி மையங்களில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
உதவி மையங்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த 15-ந் தேதி முதல் அவர்களது வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விண்ணப்பித்து ரூ.1,000 கிடைக்காதவர்களுக்கு அவர்களின் விண்ணப்ப நிலையை அறிய மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு உதவி மையங்கள் திறக்கப்பட்டது.
அந்த மையங்களில் விண்ணப்பத்தின் நிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று இந்த உதவி மையங்களில் பெண்கள் குவிந்தனர். அவர்களின் விண்ணப்ப நிலை சரிபார்க்கப்பட்டது.
சர்வர் பிரச்சினை
ரேஷன் அட்டை எண்ணை வைத்து ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது பல நேரங்களில் சர்வர் பிரச்சினை எழுந்தது. இதனால் ஒருவரது ரேஷன் கார்டு எண்ணை பலமுறை பதிவிட்டு சரிபார்த்தனர். சிலருக்கு விண்ணப்ப நிலை அறிய முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அவதி அடைந்தனர். தொடர்ந்து அவர்களின் விவரங்களை அதிகாரிகள் குறித்துக்கொண்டு பின்னர் தெரிவிக்கப்படும் என்று அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வேலூர் மாவட்டத்தில் உரிமைத்தொகை திட்டத்தில் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய அமைக்கப்பட்ட உதவி மையங்களில் அவ்வப்போது சர்வர் பிரச்சினை எழுந்தது. எனவே பலரது விவரங்களை வாங்கி வைத்துள்ளோம். பின்னர் விண்ணப்ப நிலை சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்படும். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரேநாளில் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு விண்ணப்ப நிலை குறித்து கண்டறியப்பட்டு தெரிவிக்கப்பட்டது என்றனர். இன்னும் ஓரிரு நாளில் சர்வர் பிரச்சினை சரியாகிவிடும் என்றனர்.
தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட இணையதள முகவரியும் செயல்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.