தடைக்காலம் காரணமாக வரத்து குறைந்ததால்ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வுவஞ்சிரம் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

தடைக்காலம் காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் மீன்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை ஆனது.

Update: 2023-05-28 20:57 GMT

தடைக்காலம் காரணமாக ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்ததால் மீன்கள் விலை உயர்ந்து விற்பனை ஆனது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1,200-க்கு விற்பனை ஆனது.

மீன்பிடி தடைக்காலம்

மீன்கள் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை. இதன் காரணமாக மீன்கள் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு வார இறுதி நாட்களில் அசைவ பிரியர்கள் ஏராளமானோர் வந்து மீன்களை வாங்கி செல்வார்கள். ஈரோடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 20 டன் மீன்கள் வரத்தாகும். ஆனால் நேற்று 4 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இதன் காரணமாக நேற்று மீன்கள் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்து விற்பனை ஆனது. குறிப்பாக கடந்த மாதம் ரூ.900-க்கு விற்ற வஞ்சிரம் மீன் நேற்று ரூ.1,200-க்கு விற்பனை ஆனது.

வஞ்சிரம் கிலோ ரூ.1,200

இது குறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும்போது, 'மீன்பிடி தடைக்காலம் முடிவதற்கு இன்னும் 17 நாட்கள் இருக்கிறது. இதனால் காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் விற்பனைக்கு வருவது இல்லை. தற்போது கேரளா மாநிலத்தில் இருந்து மட்டும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தடைக்காலம் முடிந்த பிறகு தான் மீன்களின் வரத்து அதிகரிக்கும்' என்றார்.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

கடன் மீன்களான சீலா -ரூ.350, விலா மீன் -ரூ.550, பாறை -ரூ.550, மத்தி -ரூ.180, அயிலை -ரூ.250, சங்கரா -ரூ.400, வஞ்சிரம் -ரூ.1,200, நண்டு -ரூ.600, இறால் -ரூ.600. அணை மீன்களான கட்லா லோகு, கட்லா, பாறை -ரூ.170, நெய்மீன் -ரூ.130, ஜிலேபி -ரூ.130.

ஈரோடு கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு அணை மீன்கள் விற்பனைக்கு வந்தன. இங்கு ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க வந்திருந்ததால் நேற்று மீன் விற்பனை அமோகமாக நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்