உரிய ஆவணம் இல்லாததால்2 பேரிடம் இருந்து ரூ.4¼ லட்சம் பறிமுதல்
ரூ.4¼ லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலைக்கண்காணிப்பு குழு மற்றும் 27 இடங்களில் போலீசார் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து துணை ராணுவத்தினருடன் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் பறக்கும் படை அதிகாரி மெய்யப்பன் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது காரில் ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 421 இருந்தது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கள்ளுக்காட்டூரை சேர்ந்த ஜவுளி வியாபாரி பிரபாகரன் (வயது 25) என்பதும், வங்கியில் செலுத்துவதற்காக பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. எனினும் அந்த பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அதே பகுதியில் பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் ரூ.63 ஆயிரம் 500 இருந்தது.
இதுகுறித்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் (35) என்பதும், ஈரோடு அக்ரஹாரத்தில் இருந்து கிரசர் எம்சாண்ட் மணல் எடுத்து வருவதற்காக கரூருக்கு கொண்டு சென்ற பணம் என்பதும் தெரியவந்தது. ஆனால் அப்போது அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரபாகரன், செந்தில் ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட ரூ.4 லட்சத்து 37 ஆயிரம், தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின்படி, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.