கனமழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் பெய்த பரவலான மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
திருவட்டார்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் காலையில் விட்டுவிட்டு மழை பெய்தது. மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
மேலும், மேற்குத்தொடச்சி மலையையொட்டிய கோதையார், குற்றியார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட இடங்களில் விடாமல் மழை பெய்தது. இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
கோதையாற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் திற்பரப்பு அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தாலும் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலேயே காணப்பட்டனர். தொடர்ந்து மழைபெய்தால் தண்ணீர் வரத்து இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.