கூடலூர்-பாடந்தொரை இடையே அகழி தோண்டியதால்வனப்பகுதிக்குள் செல்லமுடியாமல் ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டுயானை

கூடலூர்- பாடந்தொரை இடையே அகழி தோண்டியதால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஊருக்குள் வந்த காட்டு யானை 2 மாதங்களாக தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2023-08-11 18:45 GMT

கூடலூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை.

கூடலூர்: கூடலூர்- பாடந்தொரை இடையே அகழி தோண்டியதால் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஊருக்குள் வந்த காட்டு யானை 2 மாதங்களாக தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

காட்டு யானை முகாம்

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது. தொடர்ந்து வீடுகளை உடைத்து வருகிறது. கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான தேவர் சோலை, பாடந்தொரை உள்பட பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் பாடந்தொரை பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அகழி தோண்டப்பட்டது.

sஇதனால் காட்டு யானைகள் வருகை குறைந்துள்ளது. இந்த நிலையில் கூடலூர் நகராட்சி மற்றும் பாடந்தொரை எல்லையில் அகழி தோண்டிய பணி நடைபெறுவதற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அகழி தோண்டியால் காட்டுயானையால் வனப்பகுதிக்குள் திரும்பி செல்ல முடியவில்லை.

பொதுமக்கள், தொழிலாளர்கள் அச்சம்

இதனால் கடந்த 2 மாதங்களாக வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் கூடலூர் திருவள்ளுவர் நகர், அட்டி, ஆனைசெத்தகொல்லி, அம்பலக்காடு உள்ளிட்ட இடங்களில் காட்டு யானை முகாமிட்டு இரவு பகலாக நடமாடி பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

ஊருக்குள் வந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு வனத்துறையினர் அகழி தோண்டி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் யானை ஊருக்குள் நுழைந்தபிறகு வனப்பகுதியின் எல்லையோரம் அகழி தோண்டி உள்ளனர். இதனால் யானை வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு வருகிறது. எனவே, யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்