தொடர்மழையினால் எலுமிச்சை பழம் விலை குறைந்தது

வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்மழையினால் எலுமிச்சை பழங்களின் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Update: 2023-04-27 20:48 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை பகுதிகளில் தொடர்மழையினால் எலுமிச்சை பழங்களின் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

எலுமிச்சை கிலோ ரூ.110

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை, சிப்பிப்பாறை, செவல்பட்டி, பாண்டியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எலுமிச்சை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று உள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் கோடை காலம் தொடங்கியதால் இப்பகுதியில் எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ. 110 வரை விற்பனை ஆனது. இந்த பழங்களை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான வியாபாரிகள் வந்து வாங்கி சென்றனர்.

இயற்கை உரம்

இதுகுறித்து பாண்டியாபுரம் விவசாயி ராஜ்குமார் கூறியதாவது:-

எலுமிச்சை மரம் ஒரு முறை நட்டு உரமிட்டு நன்கு பராமரித்தால் 20 முதல் 25 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியதாகும். நாங்கள் எலுமிச்சை மரத்தை வேர் அழுகல்நோயிலிருந்து காக்க வேப்பம்பழம், ஆமணக்கு விதைகளை, புண்ணாக்காக மாற்றி மரத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்துகிறோம். இதனால் மரங்களில் அதிக அளவு பழங்கள் காய்கின்றன.

வருடத்தில் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்கள் மட்டுமே எலுமிச்சையின் தேவை அதிகமாக இருக்கும். இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர்பானத்திற்காக எலுமிச்சையை அதிகம் பேர் விரும்பி வாங்கி செல்வர்.

விலை குறைந்தது

இ்ந்தநிலையில் ஏழாயிரம்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து விட்டது.

இதனால் எலுமிச்சை தேவை குறைந்து இருப்பதால் தற்போது எலுமிச்சை கிலோ ரூ.80-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு கிேலா ரூ.110-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது ஆகும். தற்போது மழை பெய்வதால் தேவையும், குறைந்தது. விலையும் குறைந்தது.

விவசாயிகள் கவலை

சூறைக்காற்றினால் அவ்வப்போது மரங்கள் சேதமடைகின்றன. சேதமடைந்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மக்காச்சோளம், உளுந்து ஆகியவற்றிற்கு மானியம் தருவது போன்று எலுமிச்சைக்கும் மானியம் தர வேண்டும். மேலும் விவசாயிகளுக்கான நுண்ணூட்ட உரம் கிடைப்பதில்லை. தனியார் கடைகளில் விலை அதிகமாக கிடைப்பதால் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றோம்.

ஆகையால் நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் வேளாண்மை அலுவலங்களில் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கினால் எலுமிச்சையின் விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்