வெளி மாநிலங்களில் தொடர் மழை: விலை குறையாத தக்காளி, சின்ன வெங்காயம்- பதுக்குவதாக வியாபாரிகள் புகார்

வெளி மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி, சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலை அதிகமாகி கொண்டே வருகிறது.

Update: 2023-07-08 20:49 GMT


வெளி மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையால் தக்காளி, சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலை அதிகமாகி கொண்டே வருகிறது.

விலை அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. தக்காளியை பதுக்கக்கூடாது என அரசும் எச்சரித்திருக்கிறது. தக்காளி மட்டுமின்றி சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய் போன்றவற்றின் விலையும் அதிகமாக உள்ளது.

பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளியின் விலை குறைவாக இருக்கும். அதாவது, 15 கிலோ எடை கொண்ட பெட்டியின் விலை ரூ.250 முதல் ரூ.400 வரை இருக்கும். ஆனால், தற்போது அதன் விலை பல மடங்கு உயர்ந்து ஒரு பெட்டியின் விலை ரூ.1300 வரை செல்கிறது.

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துகொண்டே இருக்கிறது. பதுக்கல் காரணமாகத்தான் இந்த விலையேற்றம் என வியாபாரிகள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதிக மழை காரணமாக

நேற்று காலையில் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட, தக்காளி பெட்டியின் விலை ரூ.1000 முதல் ரூ.1200 வரை இருந்தது. இதன் காரணமாக சில்லரை விலையில் தரத்தை பொறுத்தமட்டில் தொடர்ந்து ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகமாக உள்ளது. அதாவது, ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரை உள்ளது. சில்லரை விலையிலும் ரூ.180 வரை உள்ளது.

இதுகுறித்து மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது:-

சமீப காலமாக தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவைகளின் விலை அதிகமாக உள்ளது. சின்ன வெங்காயமானது, இந்த சீசனில் மைசூரில் இருந்து அதிக அளவில் வரும். ஆனால், தற்போது அங்கு அதிக மழை பெய்து வருவதால் வரத்து குறைந்துள்ளது.

அதுமட்டுமின்றி முதல் தர காய்களை கொல்கத்தா வியாபாரிகள் வாங்கி தரம் பிரித்து, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தமிழகத்திற்கு 2-வது தர காய்கள் வருகிறது. அவைகளும் அழுகிய நிலையிலேயே வருகிறது. இதன் காரணமாகத்தான் விலையேறி உள்ளது.

பதுக்கல்

தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தாராபுரத்தில் அதிக அளவில் நாட்டுக்காய்கள் விற்பனைக்கு வரும். ஆனால், அந்த நாட்டுக்காய்களை பெரிய பெரிய வியாபாரிகள் சேர்ந்து பல கோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கி பதுக்கி வைப்பதாக தகவல்கள் வருகின்றன. சின்ன வெங்காயத்தை பதுக்கி வைத்தால், ஒரு வாரத்திற்கு மேல் பாதுகாக்க முடியும். ஆனால், தக்காளி, மிளகாய் போன்றவற்றை பதுக்க முடியாது.

தக்காளியும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வருகிறது. அங்கும் மழை பெய்வதால் வரத்து வெகுவாக குறைந்திருக்கிறது. தமிழகத்தில் தக்காளி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அவைகள் ஆடிமாதம் 18-ந்தேதிக்கு பின்னர் செடியில் இருந்து பறிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும். இதுபோல், இஞ்சி தமிழகத்தில் கிடையாது. கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகள், ஓசூர், மங்களூர் போன்ற இடங்களில் இருந்து குறைந்த அளவிலேயே வருகிறது. புதிய இஞ்சி ரூ.170 முதல் ரூ.280 வரை மொத்த விலையில் உள்ளது. சில்லரை விலையில் ரூ.300-ஐ தாண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்