தொடர் கனமழையால் சேறும், சகதியுமாக மாறிய மலைக்கிராம சாலை

சகதியாக மாறிய மலைக்கிராம சாலை

Update: 2022-09-03 17:02 GMT

கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் ஆகிய 2 காட்டாறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் அரசு பஸ் அருகியம் வரை மட்டும் சென்று வந்தது. அங்கு பயணிகள் இறங்கி தங்கள் குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டு சென்றனர். பலர் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து கொண்டு ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்து சென்றனர்.

மேலும் நேற்று முன்தினம் இரவு சேதமான பகுதிகளை பார்வையிட சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் சென்று கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் வந்த ஜீப் சக்கரைபள்ளத்தில் சேற்றில் சிக்கிக்கொண்டது. இதனால் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து அங்கிருந்த மலைக்கிராம மக்கள் டிராக்டரில் கயிறு கட்டி ஜீப்பை பின்னால் இழுத்து சென்று கடம்பூரில் விட்டனர்.

தொடர்ந்து 2 காட்டாறுகளிலும் வெள்ளம் இருபுறமும் கரையை தொட்டு சென்றதால் அதிக அளவில் மலைக்கிராம சாலையில் சேறும், சகதியும் படிந்திருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பொதுமக்கள் குரும்பூர் பள்ளத்தில் மண்ணை கொட்டி சமன் செய்தனர். அதன்பின்னரே சத்தியமங்கலத்தில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் பஸ் குரும்பூர் பள்ளத்தை கடந்து சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்