நேதாஜி விளையாட்டு மைதானத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்

நேதாஜி விளையாட்டு மைதானத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசத்தால் விளையாட்டு வீரர்கள் அவதிப்படுகிறார்கள்.

Update: 2023-09-06 12:10 GMT

தளி

நேதாஜி விளையாட்டு மைதானத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசத்தால் விளையாட்டு வீரர்கள் அவதிப்படுகிறார்கள்.

விைளயாட்டு மைதானம்

உடுமலை நகராட்சி கல்பனா சாலையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டுப்பாட்டில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் மைதானத்துக்கு வந்து கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி, கூடைப்பந்து, கையுந்துபந்து, ஸ்கேட்டிங், நீளம், உயரம் தாண்டுதல், ஓட்டப்போட்டி உள்ளிட்டவற்றில் பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும் காலை மற்றும் மாலை வேளையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் மைதானத்தில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மைதானத்திற்கு விளையாட்டு பயிற்சிக்காக வருகின்ற மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

போதை ஆசாமிகள்

மாலை வேளையில் மைதானத்திற்குள் வருகை தரும் ஆசாமிகள் ஆங்காங்கே அமர்ந்து கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துகளை உபயோகிக்கின்றனர். போதை தலைக்கு ஏறியவுடன் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பொதுமக்களிடம் அத்து மீறலில் ஈடுபட்டும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு இடையூறும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அச்சமடையும் பொதுமக்கள் நடைபயிற்சியை தவிர்த்து வருகின்றனர். அதேபோன்று விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் வீரர்களும் வேறு மைதானத்திற்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

எனவே பள்ளி நிர்வாகம் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் அத்துமீறலில் ஈடுபடும் போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரைக்க வேண்டும். அதேபோன்று உடுமலை போலீசாரும் மைதானத்தில் ரோந்து வந்து போதை ஆசாமிகளின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-----------------------

Tags:    

மேலும் செய்திகள்