முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
பழனி பகுதியில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பழனி சுற்று வட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் சொட்டுநீர் பாசனம் மூலம் முருங்கை சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்களை விவசாயிகள் பறித்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் பழனியில் உள்ள உழவர்சந்தைகளிலும் நேரடியாக விவசாயிகள் விற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதன்படி நேற்று பழனி உழவர்சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.100 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகமானதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தையில் ரூ.12 வரை விற்கப்படும் நிலையில் பொதுமக்களுக்கு ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.