போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழக அரசின் கடும் நடவடிக்கை தேவை என்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-15 06:08 GMT

சென்னை,

திமுக குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுந்து, ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பார்கள் என்று எச்சரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்," பொய்யிலே பிறந்து, பொய்யிலே வாழும் தமிழகத்தின் முதலமைச்சரும், அமைச்சர்களும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ஒருசில உயர் அதிகாரிகளும் அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட திட்டங்களை, ஈர்த்த முதலீடுகளை திமுக அரசு கொண்டுவந்ததாக ஸ்டிக்கர் ஒட்டி, இந்த கையாலாகாத அரசைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

கடந்த 19 மாத திமுக மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், புதுச்சேரிக்கு சென்று திருமண விழா ஒன்றில் பேசும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத் தானே சுய பெருமை பேசுகிறார். இவர் திருவாய் மலர்ந்தருளிய பின், கடந்த ஓரிரு வாரங்களில் அரங்கேறிய, சில முக்கிய சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே தோலுரித்துக் காட்டுகிறேன்.

ஒரு பிரபல நடிகர் நடத்தி வந்த black sheep என்ற யூடியூப் சேனலை, ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் 8ம் தேதி அந்த சேனலின் சர்வர் அறையில் விஜயவாடாவைச் சேர்ந்த பாலாஜி என்ற ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், காவல்துறை இதனை மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்த காவல்துறை, இதுவரை நேரடியாக கள ஆய்வு செய்யவில்லை என்றும், இக்குற்றம் தொடர்பான அந்த அலுவலகத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் இந்நிறுவனத்தால் அகற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவல்துறை செயல்படாமல், மவுனமாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை. இந்நிகழ்வில் தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அடுத்த நிகழ்வாக, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அருண்குமார் என்பவர் உட்பட சிலர் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 25.11.2022 அன்று அருண்குமார் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அருண்குமார் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், 53 வயதான செம்புலிங்கம் என்பவர் உட்பட இருவரைப் பிடித்து கடுமையாக தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த செம்புலிங்கமும், மற்றொருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய செம்புலிங்கத்திற்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி டிசம்பர் 8ம் தேதி இரவு மரணமடைந்துவிட்டார்.

அவரது வயிற்றில் காவலர்கள் எட்டி உதைத்ததால், வயிற்றில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் மரணமடைந்ததாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் முனுசாமி என்ற வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கஞ்சா வியாபாரம் மற்றும் கடத்தல்களைப் பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் இன்பார்மராக செயல்பட்டு வந்துள்ளார் என்று' செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரிகள் இந்தப் படுகொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021-ல் தங்களுடைய பகுதிகளில் கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்று காவலர்களுக்கு செய்திகளை கூறிய திருப்பூரைச் சேர்ந்த வாசிம் அக்ரம் மற்றும் சோழவரத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்ற 32 வயதுடைய இளைஞர் ஆகியோரைத் தொடர்ந்து, அல்லிக்குளத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற இன்பார்மர் கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. உண்மையில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இந்த திமுக அரசின் ஏவல் துறை கட்டுப்படுத்த நினைக்கிறதா? அல்லது ஆளும் கட்சியினரின் கண்ணசைவுக்கு ஏற்ப நடக்க நினைக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

கஞ்சா விற்பனை அறவே தடுக்கப்பட்டதாகவும், கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது எண்ணிக்கை, பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு என்று மாதம் ஒருமுறை செய்திக் குறிப்பு வழங்கி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த திமுக அரசின் ஏவல் துறை, இதற்கு என்ன பதில் சொல்லும் என்று தெரியவில்லை. ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை அருகே கடந்த 27.11.2022 அன்று சர்வதேச மதிப்பில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த போதைப் பொருள் கலக்கப்பட்ட 20 லிட்டர் வாட்டர் கேன்கள், சாதிக்அலி என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதை கடற்படை போலீசார் தடுத்து, குற்றவாளிகளை கைது செய்தனர் என்றும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தன.

இதில் சம்பந்தப்பட்ட கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் என்பவரும், கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயினூதின் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று செய்திகள் தெரிவித்தன.

தவறு இழைத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி நானும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். உடனே, இவை அனைத்தும் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நுண்ணுயிர் கலந்த உர வாட்டர் கேன்கள் என்று செய்திகள் வெளி வந்தன. சில ஆயிரம் மதிப்புள்ள வாட்டர் கேன்கள் ஏன் வேறு மாநிலங்களில் இருந்து சென்னை வழியாக ராமநாதபுரத்திற்கு கடத்தப்பட்டு, பின்னர் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது என்ற மிகப் பெரிய கேள்விகளுக்கு இந்த ஏவல் துறையிடமிருந்து தகுந்த பதில் இல்லை.

இந்நிலையில், கடந்த 12.12.2022 அன்று மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக, இந்த போதைப் பொருட்களை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் தனசேகர் ஆகிய இரண்டு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வரை உள்ள அத்தனை சோதனைச் சாவடிகளையும் கடந்து, எந்தவித தடையுமின்றி சுமார் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் மண்டபம் வந்தது எப்படி? என்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ஆச்சரியப்படுகின்றனர். ஒருசில உயர் அதிகாரிகளின் துணை இல்லாமல் இந்தக் கடத்தல் நடந்திருக்க முடியாது என்ற சந்தேகம் இச்செய்தியைப் படிக்கும் அனைவரிடமும் எழுந்துள்ளது. எனவே, இந்த திமுக அரசின் காவல் துறை ``வாய்ச் சொல்லில் வீரரடி'' என்று இல்லாமல், போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கைக் காக்கும் வேலையைப் பார்க்காமல், மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார். தன் குடும்பத்தின் கைகளில் மட்டுமே அரசு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறார். தற்போதைய இந்த அவலம், நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் தொடருமேயானால், திமுக குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுந்து, ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பார்கள் என்று எச்சரிக்கிறேன்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்