தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கங்கள்.
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது. போதை பொருள் நடமாட்டம் குறைய அக்கறையோடும், பொறுப்போடும் செயல்படும் காவல்துறைக்கு எனது நன்றிகள். இதே ஆர்வத்தோடு செயல்பட்டு முற்றிலுமாக போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது மருத்துவர்களும், பொதுமக்களும் இது சிறப்பான திட்டம் என்றார்கள். போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆட்சிக்கு வந்த நாள் முதல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் நாங்கள் தீவிரமாக இறங்கி உள்ளோம்.
போதைப்பொருட்கள் பயன்பாடு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கும்; போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. போதைப்பொருட்களை விற்பனை செய்வோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.