மருந்து கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து

கோவையில் தூக்க மாத்திரைகள் கொடுக்காத மருந்து கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-08-20 16:54 GMT


கோவையில் தூக்க மாத்திரைகள் கொடுக்காத மருந்து கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மருந்துகடை

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 46). இவர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கடையை பூட்டும் நேரத்தில் ஆட்டோவில் 3 பேர் வந்தனர். அவர்கள் மோகன் குமாரிடம் தூக்க மாத்திரைகள் கேட்டனர்.

அதற்கு அவர் டாக்டரின் பரிந்துரை சீட்டை கொடுங்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லை என்று கூறினார்கள். அது இல்லாமல் தூக்க மாத்திரை கொடுக்க முடியாது என்று மோகன்குமார் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்திக்குத்து

இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் சேர்ந்து மோகன் குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்குமாரை கத்தியால் கத்தி விட்டு தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் சார்பில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் கொடுத்த மனுவில், மருந்து கடைகளில் புகுந்து தாக்குதல், மிரட்டல் போன்ற வற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்