போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஊர்வலம்

தர்மபுரியில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-11 18:45 GMT

போதைப் பொருட்கள்

தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலந்துரையாடினார்.

விழிப்புணர் ஊர்வலம்

இதன் தொடர்ச்சியாக தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலி காட்சியின் வாயிலாக கலெக்டர் சாந்தி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்று கொண்டனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முன்னதாக தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் இருந்து போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் சேலம் பைபாஸ் ரோடு, கலெக்டர் அலுவலகம் வழியாக இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம், கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்