பொம்மிடி அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி-நாயை குளிப்பாட்ட சென்றபோது பரிதாபம்

Update: 2023-01-16 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே நாயை குளிப்பாட்ட சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாகஇறந்தார்.

தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள புது ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி மேகன் (வயது 42). கூலித் தொழிலாளி. இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மணி மேகன் பொங்கல் பண்டிகையையொட்டி தனது நாயை அருகில் உள்ள கிணற்றுக்கு குளிப்பாட்ட சென்றார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மகன் சந்திரமோகன், கிணற்றுக்கு சென்றார். அப்போது அங்கு நாய் மட்டும் இருந்தது. இதனால் தனது தந்தை கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார்.

விசாரணை

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி மணிமேகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

பின்னர் சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரை பிணமாக மீட்டனர். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றுவிசாரித்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மணிமேகன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

நாயை குளிப்பாட்ட சென்ற தொழிலாளி, கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்