பவானி அருகே பரிதாபம் காலிங்கராயன் வாய்க்காலில் மூழ்கி 2-ம் வகுப்பு மாணவன் பலி- பெற்றோர் கதறல்

பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் மூழ்கி 2-ம் வகுப்பு மாணவன் பலியானான். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

Update: 2022-07-05 20:37 GMT

பவானி

பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் மூழ்கி 2-ம் வகுப்பு மாணவன் பலியானான். மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

2-ம் வகுப்பு மாணவன்

ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் ஈ.பி. காலனியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். அதே பகுதியில் செயல்படும் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகன்கள் நவீன்குமார் (வயது 7) திருமுருகன் (2).

நவீன்குமார் மேட்டுநாசுவன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலை 9.30 மணி அளவில் சவுந்தர்ராஜன், சித்ரா, நவீன்குமார் ஆகியோர் லட்சுமி நகர் அடுத்துள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு துணி துவைக்க சென்றார்கள். அங்கு சவுந்தர்ராஜனும், சித்ராவும் துணி துவைத்துக்கொண்டு இருந்தார்கள். நவீன்குமார் கரையில் விைளயாடிக்கொண்டு இருந்தான்.

காணவில்லை

இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து சவுந்தர்ராஜனும், சித்ராவும் கரையில் பார்த்தார்கள். நவீன்குமாரை காணவில்லை.

இதனால் பதறிப்போய் சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தெரியாமல் வாய்க்கால் தண்ணீரில் இறங்கிவிட்டானோ? என்று கதறி துடித்தவாறு வாய்க்காலில் தேடினார்கள். அங்கு குளித்துக்கொண்டு இருந்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து தேடினார்கள். மேலும் இதுபற்றி பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலுக்குள் இறங்கி சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

உடல் மீட்பு

இந்த சம்பவம் நடந்த சுமார் 3 மணி நேரம் கழித்து பெருமாள் மலை அருகே உள்ள மங்களம் படித்துறையில் சிறுவன் நவீன்குமாரின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையறிந்ததும் அங்கு சென்று தீயணைப்பு துறையினர் உடலை மீட்டார்கள். மகனின் உடலை பார்த்து சவுந்தர்ராஜனும், சித்ராவும் கதறி துடித்தது காண்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சித்தோடு போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

சவுந்தர்ராஜனும், சித்ராவும் துணி துவைத்துக்கொண்டு இருந்தபோது நவீன்குமார் தெரியாமல் வாய்க்காலுக்குள் இறங்கி இருக்கலாம். அப்போது அவன் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்