டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் பணி

டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் பணி

Update: 2023-01-10 18:45 GMT

திருவாரூர் அருகே கள்ளிக்குடியில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு செலவு இல்லாததால் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

உலக வங்கி நிதி உதவியுடன்

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நெல் சாகுபடிக்கு இடுபொருள் செலவு விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. மேலும் யூரியா உள்ளிட்ட இடுபொருள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரும் இன்னலை சந்தித்து வந்தனர்.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தல் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களில் பொதுப்பணித்துறையினரால் பரிந்துரை செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நீர் நுட்ப மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நானோ யூரியா தெளிக்கும் பணி

அதன்படி திருவாரூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் இப்கோ நானோ யூரியா தெளிக்கும் பணி நடந்தது. நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தொழில்நுட்ப ஊழியர் டிரோன் மூலம் சிறு, குறு விவசாயிகள் விளைநிலங்களில் நானோ யூரியா தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். எந்தவித செலவுமின்றி விவசாயிகளுக்கு யூரியா தெளிக்கும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில்,

உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விதை, இடுபொருள் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வயல்களில் (ஆளில்லா விமானம்) டிரோன் மூலம் இப்கோ நானோ யூரியா தெளிக்கப்பட்டு வருகிறது.

செயல்விளக்கம்

தற்போது திருவாரூர் அருகே அலிவலம், கள்ளிக்குடி கிராமங்களில் 200 ஏக்கர் யூரியா டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களில் நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி ஆகிய வட்டாரங்களில் 1500 ஏக்கர் நெல் வயல்களில் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கப்பட்டது. டிரோன் தொழில்நுட்ப முறையில் யூரியா தெளிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த தொழில் நுட்ப முறையின் மூலம் ஆட்கூலியை குறைத்து, வேகமாக துல்லியமாக உரம் தெளிக்கலாம். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்