அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்

Update: 2023-08-14 19:43 GMT

குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் லாரி உரிமையாளர்கள் மனு கொடுத்தனர்.

தடை விதிக்க வேண்டும்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட மணல் மற்றும் எம்.சாண்ட் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கார்த்திக், நிர்வாகி சுரேஷ் பாபு உள்பட சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அதில், 'தமிழகத்தில் அதிகளவிலான விபத்துகள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களால் தான் ஏற்படுகிறது. எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தடை செய்ய வேண்டும். இதன் மூலம் விபத்துகளை தடுக்கலாம். மேலும் மாவட்டத்தில் தரமற்ற மற்றும் அங்கீகாரம் இல்லாத எம்.சாண்ட் சேமிப்பு கிடங்குகளை அகற்ற வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

கலப்பு திருமணம்

தலைவாசல் அருகே உள்ள வெள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் மணிமொழி (வயது 22). இவர் நேற்று தனது கணவர் அருள்குமார் மற்றும் 5 மாத கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு ஒன்று கொடுத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக மணிமொழி கூறும் போது, 'நானும், எனது கணவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து கடந்த ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். இந்த நிலையில் எனது கணவரின் உறவினர்கள் சிலர் எங்களுக்கு பல்வேறு தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்