ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
பொள்ளாச்சி அருகே ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்த்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி மற்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ரோந்து சுற்றுபடையினர் மீன்கரை ரோடு மோதிராபுரம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் மறித்து சோதனை மேற்கொண்டனர்.
இதில் லாரிக்குள் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்தது சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சேகர் (வயது 42) என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 கிலோ கொண்ட 23 மூட்டைகளில் மொத்தம் 1150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.