இளம்பெண்ணை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள் தண்டனை

இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-04-13 18:45 GMT

கோவை

இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இளம்பெண் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டியை சேர்ந்தவர் சசிகலா (வயது 24). இவர் கோதவாடி அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அப்போது அவருக்கு, அங்கு டிரைவராக வேலை செய்த மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வினோத் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி சசிகலா தனது தோழியை பார்க்க செல்வதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். விசாரணையில், சசிகலாவை, வினோத் கடத்தி சென்று உள்ளார்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சசிகலாவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி வினோத் கொலை செய்து குழி தோண்டி புதைத்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வினோத் மீது கொலை, கடத்தல், நகையை திருடுதல், தடயங்களை மறைத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

பிடிவாரண்டு

இதற்கிடையே வினோத் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 4 ஆண்டுக்கு பின்னர் வினோத்தை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து வினோத்தை போலீசார் பாதுகாப்புடன் கோவை மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

ஆயுள் தண்டனை

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்துக்கு கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும், கடத்தலுக்கு 10 ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும், தடயங்களை மறைத்ததற்கு 10 ஆண்டு சிறை, ரூ.500 அபராதமும், நகைகளை திருடியதற்கு 2 ஆண்டு சிறை, ரூ.500 அபராதமும் விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்