'முகநூலில்' அவதூறு பரப்பியதாக டிரைவருக்கு கத்திக்குத்து

வாலிபர் மீது திருட்டுப்பட்டம் சூட்டி முகநூலில் அவதூறு பரப்பியதாக டிரைவரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-06 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

வாலிபர் மீது திருட்டுப்பட்டம் சூட்டி முகநூலில் அவதூறு பரப்பியதாக டிரைவரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் அருள்ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது27). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (43), தொழிலாளி.

இவருடைய மருமகனான ஒரு வாலிபர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் கேபிள்களை திருடியதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகநூலில் பதிவு செய்தார். அந்த பதிவை கண்ணன் பகிர்ந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர் கண்ணனை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

கத்திக்குத்து

இந்தநிலையில், சம்பவத்தன்று கண்ணன் இறச்சகுளம் அருள்ஞானபுரம் ரேஷன்கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பாலசந்தர், 'எனது மருமகன் மீது திருட்டு பட்டம் சூட்டி எப்படி முகநூலில் அவதூறு பரப்புவாய்' என்று கேட்டு தகராறு செய்தார். அத்துடன் ஆத்திரமடைந்த பாலசந்தர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்ணனின் கையில் குத்தினார். இதில் காயமடைந்த கண்ணன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்