தாறுமாறாக ஓடிய லாரி மீது சொகுசு பஸ் மோதி டிரைவர் பலி
வாணியம்பாடி அருகே தாறுமாறாக ஓடிய லாரி மீது சொகுசு பஸ் மோதி டிரைவர் பலியானார். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே தாறுமாறாக ஓடிய லாரி மீது சொகுசு பஸ் மோதி டிரைவர் பலியானார். 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
லாரிமீது பஸ் மோதி டிரைவர் பலி
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. வாணியம்பாடி அருகே நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது முன்னால் கருங்கற்களை ஏற்றி சென்ற லாரி திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக சாலையில் தாறுமாறாக ஓடியது.
அப்போது பின்னால் வந்த சொகுசு பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கரூர் மாவட்டம் கம்மபட்டி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் தனசேகரன் (வயது 30) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
போலீஸ் விசாரணை
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வாணியம்பாடி தாலுகா போலீசார் டிரைவர் தனசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.