ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் சாவு
திருச்சியில் ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதனால் தாறுமாறாக ஓடிய பஸ் டெலிபோன் கம்பத்தில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக 18 பயணிகள் உயிர் தப்பினர்.
திருச்சியில் ஓடும் பஸ்சில் மாரடைப்பு ஏற்பட்டு டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதனால் தாறுமாறாக ஓடிய பஸ் டெலிபோன் கம்பத்தில் மோதி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக 18 பயணிகள் உயிர் தப்பினர்.
மாரடைப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை காட்டுப்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் கணபதி (வயது 55). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தீரன் நகர் பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம் வழியாக புங்கனூர் வரை செல்லும் பஸ்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சில் 18 பயணிகள் இருந்தனர்.பஸ் திருச்சி பாரதியார் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி அருகே வந்தபோது, திடீரென்று கணபதிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதைப்பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர்.
பயணிகள் தப்பினர்
இதற்கிடையில் கணபதி தன்னால் முடிந்த அளவுக்கு பஸ்சை சாலையின் ஓரத்தில் நிறுத்த முயன்றார். நெஞ்சுவலியால் அவதிப்பட்ட போதிலும் தனது சாதுர்யமான செயலால் சாலையோரத்தில் உள்ள டெலிபோன் கம்பத்தில் மோதி பஸ்சை நிறுத்தினார். இதனால் பஸ்சில் இருந்த 18 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மேலும் அந்த சமயத்தில் சாலையோரத்தில் யாரும் இல்லாததால் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
டிரைவர் சாவு
இதைத்தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் கணபதியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயணிகளை காப்பாற்றி விட்டு உயிர்விட்ட கணபதியை சோகத்துடன் அங்கிருந்தவர்கள் பாராட்டினர். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.