சூரமங்கலம் உழவர் சந்தையில் லாரியில் இருந்து தவறிவிழுந்து டிரைவர் சாவு
சூரமங்கலம் உழவர் சந்தையில் லாரியில் இருந்து தவறிவிழுந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் அருண்குமார் (வயது 39), லாரி டிரைவர். இவர் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரியில் காய்கறி லோடுகளை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு சேலம் சூரமங்கலம் உழவர் சந்தைக்கு வந்தார். பின்னர் அவர் காய்கறிகளை இறக்கிவிட்டு லாரியின் மேல் பகுதியில் ஏறி தார்ப்பாயை எடுத்தார். அப்போது அவர் மீது பலகை விழுந்ததில் நிலைதடுமாறிய அவர் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருண்குமார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு இறந்தார். சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.