லாரி டேங்கை உடைத்து 100 லிட்டர் டீசல் திருடிய டிரைவர் கைது

திண்டிவனம் அருகே லாரியின் டீசல் டேங்கை உடைத்து 100 லிட்டர் டீசலை திருடிக்கொண்டு கன்டெய்னர் லாரியில் டிரைவர் தப்பினார். இவரை 20 கி.மீ. தூரம் துரத்திச்சென்று போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்

Update: 2023-07-10 18:45 GMT

திண்டிவனம்

டேங்கர் லாரி

தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் ரசாயனத்தை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தா்கா பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் லாரியை ஓட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த சாரம் பகுதியில் சாலையோரமாக லாரியை நிறுத்திவிட்டு ராமச்சந்திரன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் அந்த லாரியில் உள்ள டீசல் டேங்கை உடைத்து 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களில் 100 லிட்டர் டீசலை நைசாக திருடினார். பின்னா் அந்த 5 டீசல் கேன்களை தான் கொண்டுவந்த கண்டெய்னர் லாரியில் ஏற்றி திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலையில் தப்பிச் சென்றார்.

போலீசார் மடக்கி பிடித்தனர்

இதை டேங்கர் லாரியின் அருகில் நின்ற மற்றொரு லாரியின் டிரைவர் பார்த்து, தூங்கிக்கொண்டிருந்த ராமச்சந்திரனை எழுப்பி லாரியில் மர்மநபர் டீசலை திருடிச்சென்ற சம்பவத்தை தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வழியே வந்த தேசியநெடுஞ்சாலை ஆணைய ரோந்து வாகனத்தில் வந்தவர்கள் மூலம் ஒலக்கூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இரவு ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் திருடப்பட்ட டீசலுடன் கன்டெய்னர் லாரியில் தப்பிச்சென்ற மர்ம நபரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்திச்சென்று விழுப்புரம் மாவட்ட எல்லையான கரசங்கால் ரெயில்வே கேட் அருகே மடக்கி பிடித்தனர்.

டிரைவர் கைது

பின்னர் அந்த லாரியை ஒலக்கூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த குப்பன்(வயது 56) என்பதும், டேங்கர் லாரியில் உள்ள டேங்கை உடைத்து டீசலை திருடியதும், இதுபோன்று சாரம் பகுதியில் சாலையோரம் நிற்கும் வாகனங்களில் உள்ள டேங்கை இரும்பு கம்பியால் உடைத்து டீசலை திருடிவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 லிட்டர் டீசலுடன் கன்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்