வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து குடிநீர் நிரந்தரமாக வழங்கப்படும்

கொள்ளிடம் அருகே காடுவெட்டி கிராமத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து குடிநீர் நிரந்தரமாக வழங்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

Update: 2023-02-19 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே காடுவெட்டி கிராமத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து குடிநீர் நிரந்தரமாக வழங்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

குடிநீர் இன்றி அவதி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பழையபாளையம், கோதண்டபுரம், புளியந்துறை, அளக்குடி, காடுவெட்டி, நரியன்தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் குறித்து கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காடுவெட்டி கிராமத்துக்கு உடனடியாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து நிரந்தரமாக குடிநீர் வழங்கப்படும். அதேபோல கோதண்டபுரத்தில் இருந்து தனியாக குழாய் அமைத்து அளக்குடி கிராம ஊராட்சிக்கு குடிநீர் கொண்டு வரப்படும்.

அளக்குடியில் 30 சென்ட் நிலத்தில் தனியாக குளம் வெட்டி நீர் சேமிக்கப்படும். மின்சாரத் துறையின் சார்பில் பழுதடைந்த மின் கம்பிகளுக்கு பதிலாக உடனடியாக புதிய மின்கம்பிகள் அமைத்து தரப்படும்.

தடுப்பணைகள்

குடிநீர் வழங்குவதற்கு கூடுதல் ஆபரேட்டர்கள் நியமிக்கப்படுவார்கள். குறிப்பாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் உடனடியாக கட்டித் தரப்படும். தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பொதுவாக அளக்குடி கிராம ஊராட்சியில் சில இடங்களில் உள்ள குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இன்னும் 15 நாட்களுக்குள் தட்டுப்பாடு இன்றி நிரந்தரமாக குடிநீர் வழங்கப்படும்.

இங்கு உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுடைய பொதுவான கோரிக்கைகளை என்னிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீரேற்று நிலையம்

முன்னதாக பழைய பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் இயங்கும் நீரேற்று நிலையம், கோதண்டபுரத்தில் உள்ள நீரேற்று நிலையம், அளக்குடியில் உள்ள நீரேற்று நிலையம், அளக்குடி கிராமம் காடுவெட்டி கிராமத்துக்கு குடிநீர் கொண்டு வரும் இடம் மற்றும் புதிதாக நீர் தேக்கி வைப்பதற்காக குட்டை வெட்டப்படும் இடம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர்கள் மஞ்சுளா, கோவிந்தராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜு, ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெஜினாராணி, அருள்மொழி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவபாலன், லட்சுமி பாலமுருகன், ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ண சந்திரன், பலராமன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட துபாஸ் அக்ரகாரம், செம்மங்குளம், மாயூரநாதர் கீழவீதி, பட்டமங்கல ஆராய தெரு ஆகிய பகுதிகளில் நடந்த தூய்மை பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகர் மன்ற உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்