வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருமருகல் அருகே கல்லுளி திருவாசல் சாலையில் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனா்.
திட்டச்சேரி, செப்.13-
திருமருகல் அருகே கல்லுளி திருவாசல் சாலையில் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனா்.
வீணாகும் குடிநீர்
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சன்னதி தெருவிலிருந்து கல்லுளி திருவாசல் சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருமருகல் சன்னதி தெருவில் கொள்ளிடம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி சாலையிலும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஓடி குளம் போல் தேங்கி வீணாகிறது.
குடிநீர் தட்டுப்பாடு
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சரி செய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த பள்ளத்தில் யாராவது தவறி விழ வாய்ப்பு உள்ளது. அடிக்கடி ஆடு, மாடுகள் இந்த பள்ளத்தில் தவறி விழுந்து விடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கல்லுளி திருவாசல் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து பள்ளத்தை மூட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.