2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம்

புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமை பெறும் நிலையில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2023-05-08 19:06 GMT

அருப்புக்கோட்டை, 

புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமை பெறும் நிலையில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

பூமி பூஜை

அருப்புக்கோட்டையில் ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமி பூஜையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடந்ததாலும், பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்தை முழுவதுமாக இடித்துவிட்டு புதிய நவீன பஸ் நிலையம் கட்டுவதற்கு முதல்- அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்தேன். அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் முழு வடிவம் பெறும் போது பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். வசதி, நவீன கழிப்பறை, பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளது.

குடிநீர் திட்டம்

நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ள நிலையில் அதற்கான பணிகளும் விரைவில் நடைபெற உள்ளது. வைகை அணையில் இருந்து கிடைக்க பெறும் குடிநீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு மையம் கட்டங்குடியில் அமைக்கப்பட உள்ளது.

புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் முழுமை அடையும் உள்ள நிலையில் கூடுதல் தண்ணீர் பெறப்பட்டு பொதுமக்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும். நவீன முறையில் புதிய மார்க்கெட், கூடுதல் மின் தகன மேடை அமைக்கும் பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம். புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல்கமீது, பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் முரளி, தி.மு.க. நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்