குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்
மலுமிச்சம்பட்டி குடிசை மாற்றுவாரிய குடியிருப்புக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்
கோவை
கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் இந்த குடியிருப்பில் கடந்த 4 ஆண்டாக வசித்து வருகிறோம். இங்கு 1440 வீடுகள் உள்ளன. எங்கள் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய 9 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப் பட்டன.
அதில் 5 ஆழ்துளை கிணறுகள் பழுதாகிவிட்டது. இதனால் குடிநீர் சரிவர கிடைப்பது இல்லை.
எனவே செட்டிபாளையத்தில் உள்ள பில்லூர் குடிநீர் உந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக 2 லட்சம் லிட்டர் குடிநீர் பெற்று கொடுக்க வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தாங்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.