ரூ.41 லட்சத்தில் குடிநீர் திட்டம்

கோத்தகிரி அருகே ஜக்கனாரை ஊராட்சியில் ரூ.41 லட்சத்தில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-06-16 20:30 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அருகே ஜக்கனாரை ஊராட்சியில் ரூ.41 லட்சத்தில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குடிநீர் தட்டுப்பாடு

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜக்கனாரை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் 47 குக்கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை வனத்துறைக்கு சொந்தமான கோத்தகிரி பெரிய சோலை வனப்பகுதியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் குழாய்கள் உடைதல், நீர்தேக்க தொட்டி பழுது, பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதில் சிரமம் உள்ளிட்ட காரணங்களால் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜக்கனாரை கிராமத்திற்கும், 25 ஆண்டுகளுக்கு முன்பு சக்கத்தா கிராமத்திற்கும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது.

இதனால் அந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மீண்டும் லாங்வுட் சோலையில் இருந்து தங்கள் கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குழாய் பதிக்கும் பணி

இதையடுத்து ஜக்கனாரை ஊராட்சி நிர்வாகம் மீண்டும் இயற்கையான முறையில் உருவாகும் ஊற்று தண்ணீரை, சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஜக்கனாரை மேல்கேரி கிராமத்திற்கு கொண்டு வந்து கிராம மக்களுக்கு வினியோகம் செய்வதற்காக 14-வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து ரூ.41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ், துணைத்தலைவர் ஜெயந்தி ஆகியோர் மேற்பார்வையில் லாங்வுட் சோலையில் இருந்து ஜக்கனாரை கிராமத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டால், கிராம மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். மேலும் வாரத்திற்கு 3 நாட்கள் குடிநீர் வினியோகம் செய்து வருவதற்கு பதிலாக, 24 மணி நேரமும் தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்