மருதையாறு வடிநில கோட்ட பகுதிகளில் தூர்வாரும் பணி

மருதையாறு வடிநில கோட்ட பகுதிகளில் தூர்வாரும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.

Update: 2022-09-07 18:38 GMT

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் செய்யும் பாதைகளை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வானிலை ஆய்வின்படி, குறுகிய காலத்தில் அதிகளவிலான மழை பெய்யும் என அறிவித்ததை தொடர்ந்து, மருதையாறு வடிநிலக்கோட்டத்தின் மூலம் பிரதான நீர்வரத்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மருதையாற்றின் கிளை ஓடையான ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட தெற்கு மாதவி கிராமத்தில் இருந்து பிலிமிசை கிராமம் வரை சென்று மருதையாற்றில் இணையும் ஓடை முட்புதர்கள் அடர்ந்தும், மண் மேடிட்டும் இருந்தமையால் மழைநீர் ஓடையின் வழியாக செல்ல இயலாமல், அங்குள்ள கிராம பகுதிகளில் சென்று விவசாயிகளுக்கு சேதம் ஏற்படாத வண்ணம் தெற்கு மாதவி, சாத்தனூர், இலுப்பைக்குடி, பிலிமிசை கிராமம் வரை உள்ள ஓடைகளை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, நீர்வள ஆதாரத்துறையின் மருதையாறு வடிநில உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்