பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார்; லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று வைகை ஆற்றில் இறங்கினார். இந்த கண்கொள்ளாக் காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மதுரை,
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உலகப்புகழ் பெற்ற விழா.
சித்திரை திருவிழா
சிறப்புமிக்க இந்த சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகர்கோவில் சார்பில் தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலில் 1-ந் தேதி ஆரம்பமானது. மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 2-ந் தேதியும், 3-ந் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
கள்ளழகர் புறப்பாடு
மதுரைக்கு வடக்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகர் மலையில் அழகர், கள்ளழகர் ஆகிய திருப்பெயர்களை கொண்ட சுந்தரராஜப்பெருமாள் குடிகொண்டிருக்கிறார். அங்கிருந்து அவர் கள்ளழகர் வேடம் தரித்து, மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்குவதற்காகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொள்ளவும், தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
சித்திரை பெருவிழாவையொட்டி இந்த ஆண்டு அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு பெருமாள் கடந்த 3-ந் தேதி தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அங்கிருந்து, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து, நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது. 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அழகர் காட்சி தந்தார்.
தங்கக்குதிரையில் எழுந்தருளினார்
தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு கள்ளழகர் வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணி அளவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு சூட்டப்பட்டது.
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் அழகர் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி ஆயிரம் பொன் சப்பரத்திலேயே வைகை ஆற்றுக்கு கள்ளழகர் புறப்பட்டார்.
அழகர் ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்ததால் ஆற்றில் நீர்வரத்து உள்ளது.
கள்ளழகரை வரவேற்க நேற்று முன்தினம் இரவே மதுரை நகரெங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தல்லாகுளத்தில் இருந்து வழிநெடுகிலும் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு கள்ளழகர் வந்தார்.
பச்சைப்பட்டுஉடுத்தி வந்து இறங்கினார்
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். வைகை ஆற்றிலும், கரையோரங்களிலும், ஆற்றுப்பாலத்திலும் எங்கெங்கும் பக்தர்கள் தலைகளாக காட்சி அளித்தன. அழகர் வருவதை பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக்கொண்டிருந்தனர்.
கள்ளழகரைச் சுற்றி போலீசார் அரண்போல் அணிவகுத்து வந்தனர். 'பச்சைப்பட்டு' உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகர், நேற்று காலை 5.52 மணி அளவில் மேளதாளம் இசைக்க வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. ஏராளமானோர் பூக்கள் தூவினர். சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி அழகருக்கு ஆராதனையாக காட்டியும் வழிபட்டார்கள். ஏற்கனவே, அழகரின் சகோதரரான வீரராகவப்பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் இருந்தார்.
லட்சக்கணக்கான பக்தர்கள்
தங்கக்குதிரையில் வந்த கள்ளழகரை வரவேற்று மூன்று முறை வீரராகவப்பெருமாள் வலம் வந்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய அந்த பக்திப் பரவசமான காட்சியை காண 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் சுமார் ஒரு மணி நேரம் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ராமராயர் மண்டபம் வந்தார்.
மதியம் 1 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து அழகரை வழிபட்டனர். அவர் மீது கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இரவு 9 மணியளவில் வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.
தசாவதார காட்சி
இன்று (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு வீரராகவப்பெருமாள் கோவிலில் கள்ளழகர் திருமஞ்சனம் ஆகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார். காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளி 11 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார். மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அனுமன் கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது.
இரவு ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு 11 மணி முதல் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.