திருச்சி பஞ்சப்பூர் அருகே ரூ.21 லட்சத்தில் கோரையாற்றில் தூர்வாரும் பணிகள்

திருச்சி பஞ்சப்பூர் அருகே ரூ.21 லட்சத்தில் கோரையாற்றில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

Update: 2023-04-29 18:36 GMT

  திருச்சி பஞ்சப்பூர் அருகே ரூ.21 லட்சத்தில் கோரையாற்றில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தூர்வாரும் பணிகள்

திருச்சி பஞ்சப்பூர் அருகே கே.சாத்தனூரில் உள்ள கோரையாற்றில் நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நேற்று தொடங்கியது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 2023-2024-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெறும் பகுதிகளில் தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள ரூ.80 கோடியும், சென்னை மண்டலத்தில் (கடலூர் மாவட்டம்) 55 பணிகளை 768.30 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள ரூ.10 கோடியும் மொத்தம் 691 பணிகளை 4773.13 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள மொத்தம் ரூ.90 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் 100 பணிகளை 375.78 கிலோ மீட்டர் நீளம் வரை மேற்கொள்ள ரூ.15 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோரையாறு பகுதியில் ரூ.21 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் வரை சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைமடை வரை தங்கு தடையின்றி சென்று சேரும் வகையில், டெல்டா பாசன பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய செயலி

தூர்வாரும் பணிகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கு "தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு" என்ற (டி.என்.ஆர்.ஐ.எம்.எஸ்) செயலி புதிதாக உருவாக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காவிரி கூட்டுகுடிநீர் திட்டம்

துறையூர் அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் 18 ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கும் குப்பைகளை சேகரிக்கும் வாகனம் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, துறையூர், உப்பிலியாபுரம், தா.பேட்டை மற்றும் முசிறி ஒன்றியங்களில் சேர்ந்த 100 ஊரக குடியிருப்புகளில் உள்ள 46 ஆயிரத்து 872 வீட்டு குழாய் இணைப்புகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் அமைச்சர் பயனாளிகள் 250 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவையும், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 ஊராட்சிகளுக்கு பேட்டரியில் இயங்கக்கூடிய குப்பைகள் சேகரிக்கும் வாகனங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏலூர்பட்டியில் கூட்டுகுடிநீர் திட்டம்

இதேபோல் தொட்டியத்தை அடுத்த ஏலூர்பட்டியில் ரூ.50 கோடியில் 138- கிராம குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர்த் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் 212 ேபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, ரூ. 1 கோடியே 60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல திட்டங்களையும் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்